உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           ஞாழற் படுசினை தோழியர் நூக்க
           ஆம்பற் பரப்பிற் பாய்ந்த பைந்தொடி
           செண்ணச் சிகழிகைப் பின்னிடை சேர்ந்த
     40    பொன்னரி மாலைதன் புறம்பிடைப் புடைப்பச்
           செற்றப் புதவு குத்தி வாங்கிக்
           கொழுநன் கூந்தல் கொண்டெனக் கருதிக்
           கருநீ ருண்கட் கடையி னோக்கி
           அன்மையி னழுங்கிய நன்னுத லுவப்ப
 
                (ஒரு பெண்ணின் செயல்)
               37 - 44: ஞாழல்.........உவப்ப
 
(பொழிப்புரை) ஒருத்தி தானேறிநின்ற குங்கும மரத்தினது உயரிய கிளையைத் தன் தோழியர் அசைத்தலானே அதன்கண் நிலைகொள்ள மாட்டாளாய்ப் பொய்கையின்கண் ஆம்பல் அடர்ந்த நீர்ப்பரப்பிலே பாய்ந்தாளாகப் பாய்ந்தவள் தனது ஒப்பனை செய்யப்பட்ட சிகழிகையினையுடைய சடையிற் சேர்ந்த பொன்னரிமாலை தனது முதுகிலே புடைத்ததாக அஃதறியாமல், தான் ஊடியிருப்பவும் அதனைப் பொருட்படுத்தாமல் தன் கணவன் தனது சினமாகிய கதவினை உடைத்துத் திறந்து தனது கூந்தலைப் பற்றுகின்றான் என்று கருதியவளாய் நீராற் கழுவப்பட்ட மையுண்ட தனது கடைக் கண்ணால் சினந்து நோக்கி அவன் ஆங்கின்மை கண்டு வருந்திய நல்ல நுதலையுடைய அந்நங்கை மகிழும்படி என்க.
 
(விளக்கம்) ஞாழல் - குங்குமமரம். நீர்பாய்ந்து ஆடுவார் கரைக்கண் உள்ள மரக்கிளையில் ஏறிநின்று நீரிற் பாய்தல் வழக்கம்.

    நீர் பாய்தற்கு ஒருத்தி ஞாழற் சினையிலே ஏறிநின்றாளாக அப்பொழுது அச்சினையை அவள் தோழியர் அசைத்தனர் என்பது கருத்து. அசைத்தலாலே நிலைகொள்ளமாட்டாமல் பாய்ந்தாள் என்க.

    சிகழிகை - மயிர்முடி. பின் - பின்னல், சடை. புறம்பு - முதுகு. பொன்னரிமாலை புடைத்தலைத் தன்கணவன் தன் கூந்தலைப் பற்றுவானாகக் கருதி என்க. தான் ஊடியிருப்பவும் ஊடல் தீர்த்தலின்றித் தனது சினமாகிய கதவைத் தனது வன்கண்மையால் உடைத்தெறிந்து தன்னைப் பண்பின்றித் தீண்டுகின்றான் என்று கருதிச் சினந்து என்றவாறு.

    ஊடியிருத்தலால் கடைக்கண்ணால் நோக்கினள். அன்மையின் - ஆங்குக் கணவனில்லாமையாலே, செற்றப்புதவு - சினமாகிய கதவு. குத்திவாங்கி என்றது - இனிதே பேசி ஊடலுணர்த்தாமல் வலிந்து தீண்டுகின்றான் என்றபடியாம்.