உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
     45   வள்ளிலைப் பரப்பின் வள்பெறிந் தன்ன
          துள்ளியல் வட்டிகை துடிப்பிற் கடைஇ
          உள்வழி யுணரா துழிதருங் கணவன்
          நனிபெருங் காதலொடு நண்ணுவழி யடையப்
          பனிவா ருண்கண் பைதன் மறைய
     50   முகிழ்ந்துவீங் கிளமுலை முத்திடை நாற்றிக்
          கவிழ்ந்தெருத் திறைஞ்சுமோர் காரிகை காண்மின்
 
                 (இதுவுமது)
          45 - 51: வள்ளிலை..........காண்மின்
 
(பொழிப்புரை) அவள் கணவன் சேய்மையினின்றவன் அவள் ஆம்பற் காட்டினூடே நிற்றலின் அவள் நிற்குமிடமறியாதவனாய்ச் செறிந்த அவ்வாம்பலிலைப் பரப்பினூடே ஒரு நெடிய வாரினை விட்டெறிந்தாற் போன்று தோன்றும்படி துள்ளும் இயல்புடைய தனது பரிசிலைத் துடுப்பினாலே செலுத்தி அவளைத் தேடிச்சுழலுபவன் அவளைக் கண்டு அவள்பால் மிகப்பெரிய காதலுடையவனாய் அவள் நிற்குமிடத்தை யடையாநிற்ப, அவன் வரவினாலே தன் ஊடனீங்கி நீர்த்துளித்தலையுடைய தனது மையுண்ட கண்ணின் பசலையும் மறையா நிற்றலாலே பெரிதும் நாணித் தனது முகிழ்கொண்டு வளரும் இளமுலைமேற் கிடந்த முத்துமாலையைத் திருத்தியிடுவாள் போன்று அதனை முலையிடையே தூங்கவிட்டு முகம் கவிழ்ந்து பிடர்வளையக் குனிந்து நிற்கும் அவ்வழகியைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) நன்னுதல் உவப்பக் கணவன் அடைய இறைஞ்சும் காரிகை என்க. அள்ளிலை - செறிந்த இலை. வள்பு - வார். பரிசில் - ஒருவகைத் தெப்பம்; பரிசிலியங்கும் வழி வாரினை வீசினாற்போன்று தோன்றிற்று என்க. பரிசில் ஆம்பல் இலையை விலக்கிக் கொண்டியங்குதலாலே இலைவிலகிய இடத்தே தோன்றும் நீர் வாருக்குவமை என்று கொள்க. ஆம்பலிலையினும் மலரினும் மறைபட்டு நிற்றலின் அவள் உள்வழி உணரப்படாதாயிற்றென்க. அவனைக் கண்டதுணை யானே தன் ஊடல் மறைதற்கு நாணித் தன் முகமலர்ச்சியை அவன் உணராமைப் பொருட்டு முகம் கவிழ்ந்து எருத்திறைஞ்சி நின்றாள் என்பது கருத்து. இனித்தான் முகம் கவிழ்தற்கு ஓரேதுக்காட்டுவாள் முலைமேற் கிடந்த முத்துமாலையைத் திருத்தியிடுவாள் போன்று அதனை இரண்டு முலைகளுக்கும் இடையே இழுத்துத் தூங்கவிட்டாள் என்பது கருத்து.