உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
          கம்பற் சுற்றமொடு கன்னியர் காப்பப்
          பைந்தொடிக் கோமா ணங்கையர் நடுவண்
          வண்டுள ரைம்பால் வாசவ தத்தை
     65   அரைச மங்கைய ராயமொடு கெழீஇ
          நிரைவெண் மாடத்து நீரணி காணிய
          போதரு மென்னுங் காதலின் விரும்பிப்
          பெருங்காற் புன்னைக் கருங்கோட் டணைத்த
          நாவாய் பண்ணு மாவிறன் மள்ளர்க்குக்
     70   கள்ளடு மகடூஉக் கைசோர்ந் திட்ட
          வெள்ளி வள்ளம் பல்லுறக் கவ்விக்
          கூடக் கூம்பி னீடிர ளேறி
          உச்சிக் கிவருங் கட்கின் கடுவன்
          வீழ்ந்த திங்களை விசும்புகொண் டேறும்
     75   தெய்வ மகாஅரி னையுறத் தோன்றித்
          துள்ளுபு திரிதருந் தோற்றங் காண்மின்
 
             (இதுவுமது)
        62 - 76: கம்பல்.........காண்மின்
 
(பொழிப்புரை) தன் ஆருயிர்த் தோழியாகிய வண்டு கிண்டும் கூந்தலையுடைய வாசவதத்தை ஆரவாரமுடைய தோழியரோடு கன்னி மகளிர் தன்னைப் பாதுகாவா நிற்பப் பசிய தொடியை யணிந்த தேவிமார் நடுவணாக அவர்தம் தோழிமாரோடும் கூடி நிரல்பட்ட வெண்மாடத்தே ஏறிநின்று இந்நீர் வீழாவினைக் காண வருகுவள் என்று எதிர்பார்த்து, அன்பாலே விரும்பி அவள் வந்துழி அவளோடாடுதற் பொருட்டு ஆங்குப் பெரிய அடியினையுடைய புன்னை மரத்தின் கரிய கிளையிலே கட்டி வைத்த அவளுடைய ஓடத்தை ஒப்பனை செய்யா நின்ற பெரிய வெற்றியையுடைய தொழிலாளர்க்கு ஊட்டும் பொருட்டுக் கள்ளைக் காய்ச்சுகின்ற கள் விலையாட்டி தனது கைச்சோர்வினாலே நழுவவிட்ட வெள்ளியாலாய கிண்ணத்தைக் கண்ணுக்கினிய ஓர் ஆண் குரங்கு தன்னுடைய பற்கள் பொருந்த வாயிற் கவ்விக்கொண்டு அவ்வோடத்தின் நடுவண் நடப்பட்ட பாய்மரத்தின் நெடிய திரளிலே ஏறிப் பினைரும் உச்சியில் ஏறா நிற்கும்; அக்குரங்கு வானினின்றும் வீழ்ந்த திங்களை எடுத்துக் கொண்டு வானத்தே ஏறாநின்ற தேவ குமாரனோ? என்று யாம், ஐயுறும்படி தோன்றி அவ்வுச்சியிலேயே துள்ளித்திரியா நின்றதொரு காட்சியைக் காணுங்கோள்! என்க.
 
(விளக்கம்) வெண்கோயிலுள், சேனாபதிமகள் வாசவதத்தை நீரணி காணிய போதரும் என்னும் அவளோடு ஆடற்பொருட்டுப் புன்னைக் கோட்டில் அணைத்து வைத்த நாவாயைப் பண்ணும் மள்ளர்க்குக் கள் அடுகின்ற மகள் சோர்ந்திட்ட வள்ளத்தைக் கவ்வி ஏறி இவரும் கடுவன் திரிதரும் தோற்றம் காண்மின் எனத் தொடர்பு காண்க.

   கம்பல் - கம்பலை: ஆரவாரம். கோமாணங்கையர் என்றது மன்னன் மனைவிமாரை அரைசமங்கையர் என்றது பிறமன்னர் மனைவியரை. அவள் பொருட்டு அணைத்த நாவாய் என்க. பண்ணும் - ஒப்பனை செய்யும். மள்ளர் என்றது தொழிலாளரை. கள்ளட்டு வாக்கும் மகள் என்பது கருத்து. கூடம் - உள்ளிடம். கூம்பு - பாய் மரம். கடுவன் - ஆண்குரங்கு.