உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
          சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன்
          அழனறுந் தேற லார மாந்திக்
          காழக மீக்கொண் டாழுந் தானையன்
     80   வாழ்க வாழ்கவெம் மதிலுஞ் சேனை
          மட்டுண் மகளிர் சுற்றமொடு பொலிகெனத்
          துட்டக் கிளவி பெட்டவை பயிற்றிக்
          கட்பகர் மகடூஉக் கட்குடை யோசையும்
          கன்னமர் பள்ளிக் கம்மிய ரிடிக்கும்
     85   பன்மலர்க் காவி னம்மனை வள்ளையும்
          குழலும் யாழும் மழலை முழவமும்
          முட்டின் றியம்பும் பட்டின மொரீஇத்
          துறக்கங் கூடினுந் துறந்திவ ணீங்கும்
          பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி
     90   ஆர்த்த வாய னூர்க்களி மூர்க்கன்
 
             (ஒரு களிமகன் செயல்)
         77 - 90: சுழலும்..........மூர்க்கன்
 
(பொழிப்புரை) கரிய அழுக்காடையை மேற்கொண்டவனும் நழுவி வீழ்கின்ற ஆடையையுடையவனும், ஆகிய உஞ்சை நகரத்துக் களி மகனாகிய ஒரு கயவன் வெப்பமிக்க நறிய கள்ளை வயிறுபுடைக்கப் பருகிச் சுழலாநின்ற கண்ணையும், சோர்ந்து வீழும் மாலையையும், உடையவனாய் "வாழ்க! வாழ்க! மதிலையுடைய எமது உஞ்சைமா நகரம்; கள்ளையுண்ணும் மகளிர் தமது சுற்றத்தாரோடு பொலிவுடையராக!" என்று தான் விரும்பியவையாகிய கயமைச் சொற்களைப் பலகாலும் கூறிப் பின்னரும் "கள் விற்கும் மகள் கள்ளைத் துழாவுதலாலுண்டான ஓசையும், தொழிலை விரும்புதற்கிடமான தொழிற்சாலையையுடைய தொழிலாளர் பலவாகிய மலர்களையுடைய சோலையின்கண் (கள் வடித்தற் பொருட்டு மரப்பட்டை முதலியவற்றை) இடிங்குங்காற் பாடுகின்ற உலக்கைப் பாட்டும், கள்ளுண்டு மகிழ்ந்தோர் இசைக்கின்ற குழலோசையும் யாழோசையும் இனிய முழவொலியும் எப்பொழுதும் முட்டுப்பாடின்றி முழங்கு தற்கிடமான இந்தப் பட்டினத்தை விட்டக்கால், மேனிலையுலகமே எனக்குக் கிடைப்பதாயினும் இந் நகரத்தை நீங்கி ஆண்டுப் போய்ப் பிறக்கும் அத்தெய்வப் பிறப்பையும் யான் விரும்பேன் என்று கூறி ஆரவாரிக்கும் வாயையுடையவனாய் என்க.
 
(விளக்கம்) தேறன் மாந்திச் சுழலுங்கண்ணினன் என மாறுக. காழகம் - கரிய துணி. ஆழும் - நழுவும். மட்டு - கள். துட்டக் கிளவி - கயமைச் சொல். பெட்டவை - விரும்பியவை. கள் - தொழில். பள்ளி - ஈண்டுத் தொழிற்சாலை. மலர்க்காவின்கண் கள்ளடுதற்குப் பட்டை முதலியன இடிக்கும் அம்மனைவள்ளை என வருவித்தோதுக. அம்மனைவள்ளை ஒருவகை உலக்கைப்பாட்டு. பட்டினம் என்றது உஞ்சையை. துறக்கம் - மேனிலையுலகம். பிறப்பு - தெய்வப்பிறப்பு. மூர்க்கன் - கயவன்.