உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
செவ்வழிக்
கீதஞ் சிதையப்
பாடி அவ்வழி வருமோ
ரந்த ணாளனைச்
செல்ல லாணை நில்லிவ
ணீயென எய்தச்
சென்று வைதவண் விலக்கி 95 வழுத்தினே
முண்ணுமிவ் வடிநறுந்
தேறலைப் பழித்துக்
கூறுநின் பார்ப்பனக்
கணமது சொல்லா
யாயிற் புல்லுவென்
யானெனக் கையலைத்
தோடுமோர் களிமகற் காண்மின்
|
|
(இதுவுமது) 91 - 98:
செவ்வழி..........காண்மின்
|
|
(பொழிப்புரை) செவ்வழிப்பண்ணொன்றனை
இசைநலங் கெடும்படி பாடிச் செல்பவன் அந்த வழியிலே தன் எதிரே
வருகின்ற ஒரு பார்ப்பன மகனை நோக்கி "ஏடா! நீ
செல்லாதேகொள்! இவ்விடத்திலேயே நில்!" இஃது என் ஆணை, என்று தடுத்து
நிறுத்தி அவனை அணுகி வைது, "ஏடா நின்பார்ப்பனக் கூட்டம் எம்மனோர்
வாழ்த்தி வணங்கிப் பருகாநின்ற இந்த வடித்த நறுமணங்கமழுங்
கள்ளைப்பழித்துக் கூறாநிற்கும் அன்றோ? அங்ஙனம் பழித்துக் கூறுதற்குரிய
காரணம் யாது? அதனைச் சொல்லிக் காண்! சொல்லாயாயின் யான் நின்னைக்
கட்டிப்பிடிப்பேன் என்று கூறித் தனது கைகளை அசைத்துக் கொண்டு
ஓடாநின்றனன். அக் களிமகனைக் காணுங்கோள்! என்க.
|
|
(விளக்கம்) செவ்வழிக்கீதம் - ஒருவகைப் பண். செல்லல் - போகாதே. ஆணை - கட்டளை.
வழுத்தினேம் - வழுத்தி; வாழ்த்தி. கணம் - கூட்டம். அது - அக்
காரணத்தை. அக்களிமகன் என்க.
|