உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           பல்காசு நிரைஇய வல்குல் வெண்டுகில்
     100    ஈரத் தானை நீரிடைச் சோரத்
           தோட்டார் திருநுதற் சூட்டயற் சுடரும்
           சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து
           மகர குண்டல மறிந்துவில் வீசக்
           கிளரும் பாசிழைக் கிண்கிணிக் கணைக்கால்
     105    அஞ்செஞ் சீறடி யஞ்சுவர வோடி
           நிரைவளை மகளிர் நீர்குடை வொரீஇப்
           புரைபூங் கொண்டையிற் புகைப்பன காண்மின்
 
             (சிலமகளிர் செயல்)
         99 - 107: பல்காசு..........காண்மின்
 
(பொழிப்புரை) நிரைத்த வளையலையுடைய மகளிர் சிலர் பலவாகிய மணிகளை நிரல்படப் பதித்த மேகலையையுடைய தம் அல்குலிடத்தே அணிந்த நனைந்த வெள்ளிய ஆடையாகிய தானை நீரின்கண் நழுவும் படியும் இதழ் பொருந்திய மலர் அணிந்த தமது அழகிய நுதன் சூட்டிற் மருங்கே ஒளிவீசாநின்ற சுட்டி சிதையும் படியும் ஆழ்ந்த நீர்ப்பரப்பிலே குளித்துப் பின்னர் அந்நீராடலை ஒழித்துத் தமது செவியணியாகிய மகரகுண்டலம் பிறழ்ந்து ஒளி வீசாநிற்பவும்; ஒளி கிளருகின்ற பசிய மணிகள் இழைத்த கிண்கிணியணிந்த கணைக் காலையுடைய தமது அழகிய சிவந்த சிறிய அடிகள் அஞ்சா நிற்பவும், கரைக்கு ஓடி ஆங்குத் தமது உயரிய பூவணிந்த கொண்டை நறுமணம் புகையூட்டுவனவற்றைக் காணுங்கோள்! என்க.
 
(விளக்கம்) காசு - மணி. வெண்டுகிலாகிய தானை என்க. சோர - நழுவ. தோட்டார் : விகாரம். சூட்டு - ஒருவகை மலர்மாலை. சுட்டி - நெற்றிச்சுட்டி. மகரமீன் வடிவமாகச் செய்த குண்டலம். ஒரீஇ - ஒழித்து. புரை - உயர்வு.