உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           அதிரல் பரந்த வசோகந் தண்பொழின்
           மணிக்கயத் தியன்ற மறுவி றண்ணிழற்
           பனிப்பூங் குவளையொடு பாதிரி விரைஇ
           வேதிகை யெறிந்த வெண்மணற் றிண்ணைப்
     125    பாலிகைத் தாழியொடு பல்குட மிரீஇ
           முந்தீர்ப் பந்தர் முன்கடை நாட்டி
           வரைவின் மாந்தர்க்குப் புரைபதம் பகரும்
           கலம்பூச் சரவத் திலஞ்சி முற்றத்துக்
           கருப்புக் கட்டியொடு தருப்பணங் கூட்டி
     130    நெய்ச்சூட் டியன்ற சிறுப லுண்டி
           நகைப்பத மிகுத்த கைய ராகித்
           தொகைக்கணம் போதரு மறச்சோற் றட்டில்
 
            (உண்ணும் பார்ப்பனர் செயல்)
             121 - 132: அதிரல்..........அட்டில்
 
(பொழிப்புரை) புனலிக்கொடி படர்ந்து பரவிய அசோக மரத்தினது குளிர்ந்த பொழிலின்கண்ணே நீலமணி போலும் நிறமுடைய தெளிந்த நீரையுடைய குளம்போன்று குளிர்ந்த குற்றமற்ற நீழலின்கண் வெள்ளிய மணலை அகழ்ந்து குவித்த வேதிகை போன்ற வெள்ளிய மணல்மேட்டிலே குளிர்ந்த குவளை மலரையும் பாதிரி மலரையும் கலந்து பெய்த நீரையுடைய பாலிகைத்தாழிகளையும் பலவேறு குடங்களையும் வைத்துக் கடல்போல நீர் அறாத தண்ணீர்ப் பந்தலை முன்றிலிலே நாட்டி வைத்து எண்ணற்ற மக்கட்கு உயரிய உணவை வழங்குகின்ற அட்டிற்கலந் தேய்க்கும் ஒலியையுடைய குளத்தையுடைய முன்றிலின்கண்ணே கருப்புக்கட்டியையும் அவலையும் கூட்டி நெய்யில் வறுத்த பலவாகிய சிற்றுண்டிகளும் ஒளியுடைய உணவும் மிகுந்த கையை யுடையராகி வாய்பூசுதற்குத் தொகுதி தொகுதியாக மாந்தர் கூட்டம் வெளிவரா நின்ற அறச்சோறு வழங்கும் கோட்டத்தின்கண்ணே என்க.
 
(விளக்கம்) அதிரல் - புனலிக்கொடி. மோசிமல்லிகையுமாம். மணிபோன்ற நீலநிறமுடைய கயம் என்க. கயம் நிழலுக்குவமை. வேதிகையாக எறிந்தாற்போன்ற மணற்றிண்ணை என்க. வேதிகை - மேடை. திண்ணை - மேடு. பாலிகைத்தாழி பாலிகை போன்று அகன்ற வாயையுடைய தாழி. முந்நீர் - கடல் கடல்போன்று நீர் அறாத தண்ணீர்ப்பந்தர் என்க. வரைவு - அளவு. புரைபதம் - உயர்ந்த வுணவு. பகரும் - வழங்கும். கலம் - அட்டிற்கலம். இலஞ்சி - குளம். தருப்பணம் - அவல். நகைப்பதம் - ஒளியமைந்தவுணவு. தொகை தொகையாக மாந்தர்கணம் போதரும் என்க. அறச்சோறடும் இல் என்க.