உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           தளையுலை வெந்த வளைவா லரிசி
           வண்ணப் புழுக்க லுண்ணாது சிதறி
     135    ஊட்டெமக் கீத்த கோப்பெருந் தேவி
           முன்ன ராக முன்னுமின் கொண்டெனத்
           தலைப்பெரு மடையனைத் தலைக்கடை வாங்கும்
           எந்தயிர் வாரா னெமக்கெனச் சீறி
           அந்த ணாள ரலைப்பது காண்மின்
 
             (இதுவுமது)
      133 - 139: தளையுலை..........காண்மின்
 
(பொழிப்புரை) மடையர் தலைவனை இவன் எமக்குரிய தயிரினை எமக்கு வார்த்திலன் என்று சினந்து தமக்கு வழங்கப்பட்ட மறுகிய உலைநீரில் வெந்த சங்குபோன்ற வெண்ணிறமுடைய அரிசியாற் பொங்கிய நிறமிக்க பொங்கற் சோற்றையும் உண்ணாமல் சிதறிவிட்டு "இவைனைப் பற்றிக் கொண்டு நமக்கு இவ்வுணவினை வழங்கிய கோப்பெருந்தேவி திருமுன்னர்ப் போமின்!" என்று கூறி அத்தலைவனைத் தலைவாயிலை நோக்கி இழுக்கின்ற பார்ப்பன மாக்கள் அவனைத் துன்புறுத்துதலைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) தளையுலை - வெப்பமேறி மறுகிய உலைநீர். வளை - சங்கு. வண்ணப்புழுக்கல் - நிறமிக்க பொங்கற் சோறு. ஊட்டு - உணவு. முன்னுமின் - போமின். தலைக்கடை வாங்கும் - தலைவாயிலுக்கு இழுக்கின்ற அந்தணாளர் என்க. அவனை என வருவித்துக் கொள்க.