உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
     140    முன்றுறை யீண்டிய குன்ற வெண்மணல்
           எக்கர் மீமிசைத் தொக்கருங் கீண்டி
           நுண்ணயிர் வெண்டுகள் குடங்கையின் வாரி
           இலைப்பூண் கவைஇய வெழுதுகொடி யாகத்து
           முலைக்கச் சிளமுலை முகத்திடை யப்பி
     145    மராஅ மயிலின் மயங்குபு தூங்கும்
           குழாஅ மகளிர் குரவை காண்மின்
 
              (மகளிர் குரவை)
         140 - 146: முன்றுறை..........காண்மின்
 
(பொழிப்புரை) கூட்டமாகக்கூடிய மகளிர் சிலர் வெண்கடப்ப மரத்தின் மிசைக் குழுமிய மயில்கள் போன்று பொய்கைத் துறை முன்புள்ள குவிந்த எக்கராகிய வெண்மணற் குன்றின் உச்சியிலே ஒருங்கே ஏறிக்குழுமி அதன் நுண்ணிய மணலாகிய வெள்ளிய துகளைக் களிப்பினாலே தமது குடங்கையானே வாரி வாரி இலைத் தொழிலையுடைய அணிகலன்கள் சூழ்ந்த பூங்கொடி எழுதப்பட்ட தமது மார்பின் கண்ணேயமைந்த கச்சணிந்த தமது இளமுலை முகத்தின் கண்ணே அப்பிக்கொண்டு அம்மயில்கள் மயங்கி ஆடுதல் போன்று ஆடாநின்ற குரவைக் கூத்தினைக் காணுங்கோள்! என்க.
 
(விளக்கம்) மகளிர் ஈண்டி வாரி அப்பித் தூங்கும் குரவை என்க வெண்மணற்குன்றின் மிசைக் கூடியிருக்கும் மகளிர்க்கு வெண்கடப்ப மரத்தின் மிசையமர்ந்த மயிற்குழாம் உவமை என்க. அயிர் - நுண் மணல.் முலைக்கச்சு : பெயர். மராஅம் - வெண்கடப்பமரம். தூங்கும் - ஆடுகின்ற. குரவை - ஒருவகைக் கூத்து.