உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           புனைந்தேந் தல்குற் காசுபுதை யாது
           நனைந்து நிறங்கரந்த நார்நூல் வெண்டுகில்
           அரைய தாகவு மாடைகா ணாது
     150    நிரைவளை முன்கைத் தோழியர் குடைந்த
           நுரைகை யரிக்குமோர் நுடங்கிடை காண்மின
 
              (ஒரு பெண்ணின் செயல்)
           147 - 151: புனைந்து..........காண்மின்
 
(பொழிப்புரை) துவளாநின்ற இடையினையுடையாளொரு நங்கை ஒப்பனை செய்யப்பட்டு உயர்ந்த தனது அல்குலிடத்து மேகலைமணிகளைத் தாமும் மறையாமல் நீரின நனைந்தமையானே தனது நிறம் மறைந்த நாராகிய நூலாலியற்றிய வெள்ளிய ஆடை தனது இடையின்கண் உளதாகவும் அதனைக் காணாதவளாய் நிரந்த வளையலணிந்த முன்கையையுடைய தன் தோழிமார் ஆடுதலானே உண்டான நுரையினைத் தன் ஆடையென்று கருதி அந்நுரையைத் தன் கையால் அரிக்கின்றவளைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) அல்குற்காசு - மேகலைமணி. நுண்மையுடைமையின் நனைந்தவுடன் உடலோடு உடலாய் ஒட்டிக் கொண்டமையின் காணப்படாதாயிற்று என்க. நாரினால் நுண்ணிய ஆடை நெய்தல் பண்டைக் காலத்தும் நிகழ்ந்தமை இதனாற் பெற்றாம். நுரையைக் காணாமற்போன தனது வெண்டுகில் என்று கருதிக் கையால் அரித்தனள் என்பது கருத்து. நுடங்கிடை : அன்மொழித்தொகை.