உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           தொக்கனர் படியுந் தொய்யின் மகளிர்தம்
           கைக்கொ ணீரிற் கண்ணிழல் கயலென
           மெய்க்கண் மேவார் மெல்லெனச் சொரிதந்
     155    தெக்கர்க் கிளைக்கு மேழையர்க் காண்மின்
 
              (சீலமகளிர் செயல்)
          152 - 155: தொக்கனர்..........காண்மின்
 
(பொழிப்புரை) ஓரிடத்தேகூடி நீராடா நின்ற தொய்யிலெழுதப்பட்ட முலையினையுடைய மகளிர்சிலர் தம் குடங்கையில் நொண்டு கொண்ட நீரினூடே தோன்றுகின்ற தமது கண்ணினது நிழலைக் கயல்மீன் என்று கருதி உண்மையுணராதவராய் அந்நீரோடு கரைக்கட் சென்று அந்நீரினை மெல்லென நிலத்திலே சொரிந்து தாங் கண்ட கயல்மீனைக் காணப் பெறாராய் ஒரோவழி அம்மீன் இம்மணலினுள் புகுந்து மறைந்ததோ என்று ஐயுற்று அவ் வெக்கர்மணலைக் கிண்டிப் பாராநிற்கின்ற அப்பேதை மகளிரைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) தொய்யில் - முலைமுதலிய இடங்களில் எழுதப்படும் கோலம். தோன்றும் தமது கண்ணிழல் - நிழல் ஈண்டு எதிருருவம். ஏழையர் என்றது அவர்தம் பேதைமையைச் சுட்டி நின்றது.