உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           நெடுநீர் மாடத் தேணி யேறிப்
           பொறிமயிற் பெடையிற் பொங்குபு பாய்தலில்
           அணிக்கையிற் றவழ்ந்த மணிக்குர லைம்பால்
           ஈர்முத் தாகத் தீரம் புலர்த்தி
     160    அழன்றுந் தேறல் சுழல்வண் டோப்பிக்
           குறிவெங் காதலன் பொறியாப் புறுத்த
           தமனிய வள்ளத்துத் தன்னிழ னோக்கிப்
           பிறண்முக மிதுவெனப் பெண்மையின் மயங்கிக
 
              (களிமகளும் அவள் காதலனும்)
               156 - 164: நெடுநீர்..........மயங்கி்
 
(பொழிப்புரை) ஒரு தலைவி நெடிய நீர்மாடத்தே யமைந்த ஏணியின்கண் ஏறி நின்று புள்ளிமயிற் பேடைபோன்று எழுந்து நீரினுட் பாய்தலானே தனது அணிகலன் அணிந்த கைகளின்பாற் சரிந்த நீலமணி போலும் நிறமுடைய கொத்துக் கொத்தான கூந்தலின் ஈரத்தைக் குளிர்ந்த முத்துமாலையணிந்த தனது மார்பகத்தின் வெப்பத்தாலே நன்கு உலர்த்திப் பின்னர் வெப்பந்தருகின்ற நறிய கள்ளினைக் கையிலேந்தி அதனைப் பருகுதற்கு வந்து சுழலாநின்ற வண்டுகளை மற்றொரு கையால் ஓட்டிக்கொண்டு தன் குறிக்கோளாளனாகிய விரும்புதற்குக் காரணமான தன் காதலன் பெயர் பொறித்த பொன் வள்ளத்தை வாயிற் பொருத்துவாள். அக்கள்ளினூடே தன்னிழல் தோன்றக் கண்டு அதனை நிழல் என்று தனது பெரும் பேதைமை காரணமாக அறியாதவளாய் மற்றொருத்தியின் முகமே இது என்று கருதி மயங்கி என்க
 
(விளக்கம்) ஒருதலைவி என எழுவாய் வருவித்துக் கொள்க. பொறிமயில் - புள்ளிமயில். மணி - நீலமணி. குரல் - கொத்து. ஈர்முத்து - குளிர்ந்த முத்துமாலை. அழல் - வெப்பந்தருகின்ற - உண்ணும் பொருட்டு வந்து சுழல் வண்டென்க. குறிக்கோளாளனாகிய காதலன் என்க. பொறி - பெயர். பெண்மை - ஈண்டுப் பேதைமை. இச்
செய்யுளோடு,

"விடனொக்கு நெடிய நோக்கி னமிர்தொக்கு மின்சொ லார்தம்
மடனொக்கு மடனு முண்டே வாணுத லொருத்தி காணத்
தடனொக்கு நிழலைப் பொன்செய் தண்ணறுந் தேறல் வள்ளத்
துடனொக்க வுவந்து நீயே யுண்ணுதி தோழி யென்றாள்"

எனவும், (கம்ப - உண்டாட் - 10)

"அச்சநுண் மருங்கு லாளோ ரணங்கனா ளளக பந்தி
நச்சுவேற் கருங்கட் செவ்வாய் நளிர்முக மதுவுட் டோன்றப்
பிச்சிநீ யென்செய் தாயிப் பெருநற விருக்க வாளா
எச்சிலை நுகர்தி யோவென் றெயிற்றரும் பிலங்க நக்காள்"

எனவும் வரும் செய்யுள்களை ஒப்புநோக்குக (கம்ப - உண்டாட் - 11).