உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           கள்ளினுட் டோன்றுமிவ் வொள்ளிழை மாதரைப்
     165    பண்டு மொருகாள் கண்டகத் தடக்கிய
           வையப் பரத்தையைக் கையொடு கண்டேம்
           இனிப்பொய் யுண்ணு மேழைய மல்லமென்
           றணித்தகு நுதல்வியர்த் தரையெழுத் தளைஇத்
           துனிப்புறு கிளவி பனிக்கடற் பிறந்த
     170    அரும்பெற லமிழ்தென விரும்பும் வேட்கையன்
           முகிழ்நகை முகத்த னாகி முற்றிழை
 
              (இதுவுமது)
         164 - 171: கள்ளினுள்..........முகத்தனாகி
 
(பொழிப்புரை) கள்ளினூடே தோன்றாநின்ற இவ்வெள்ளிய அணிகலன் அணிந்த அழகியை யான் பண்டும் ஒருகால் தலைவனோடு ஒரு தேரின்கட் கண்டு பிறர்க்குக் கூறாமல் நெஞ்சகத்தே அடக்கிக் கொண்டதுண்டு. இந்தப் பரத்தையை இப்பொழுது கையோடே பிடித்துக்கொண்டேன். இனி அவன் கூறும் பொய்யை மெய்யென்று நம்புமளவிற்கு யாம் பேதைமையுடையேம் அல்லேம் என்று சினந்து அழகு தக்கிருக்கின்ற தனது நுதல் வியர்த்துக் கூறாநின்ற அரையெழுத்துவரும் கலந்த புலவியையுடைய வெஞ்சொற்களை அயலில்வந்த அவள் காதலன் குளிர்ந்த பாற்கடலிலே தோன்றிய பெறுதற்கரிய அமிழ்தம் போன்று விரும்பிக்கேட்கும் அவாவுடையனாய்ப் புன்முறுவல் பூத்த முகத்தையுடையனாகி" என்க.
 
(விளக்கம்) இவ்வொள்ளிழை மாதரை என்றவள் சினத்தால் யான் பண்டு தலைவனோடு கண்ட "வையப் பரத்தையை" என விளக்கமும் கூறிக்கொள்கின்றாள் என்க. இம்மாதரை என்றது கள்ளினுட்டோன்று முருவத்தை. வையப்பரத்தை - தேர்ப்பரத்தை. அவளைத் தலைவனோடு தேரிற்கண்டேன் என்பது தோன்ற இங்ஙனம் அடை கொடுத்தோதுகின்றனள். அவன் அப்பொழுது அங்ஙனமொரு பரத்தையின் தொடர்பு தனக்கில்லை என்று பொய் கூறித் தப்பினன். இனி அத்தகைய பொய்யை நம்பவேண்டா என்பாள். இனிப் பொய்யுண்ணும் பேதையம் அல்லம் என்றாள். பொய்யுண்ணல் - பொய்யை மெய்யாக உட்கொள்ளுதல் என்க. அரையெழுத்தளைஇத் துனிப்புறுகிளவி என்றது எழுத்தின் முழுஉருவமும் தோன்றாதபடி மொழிந்த மழலையாகிய சினமொழி என்றவாறு. அம்மொழியையே அவன் அமிழ்தம் எனக் கேட்க விரும்புகின்றனன் என அவன் காதற்சிறப்பை விதந்தோதினர்.

பனிக்கடல் என்றது பாற்கடலை.