உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           முகிழ்நகை முகத்த னாகி முற்றிழை
           அவிழ்குரற் கூந்த லங்கை யடைச்சிக்
           கள்ளமர் தேவிநின் கதிர்விடு நெடுமுகத்
           தொள்ளணி காணிய வுள்ளி வந்ததை
     175    உணராது புலத்தல் புணர்குவை யாயினென்
           உள்ளகஞ் சுடுமென வுள்ளவிழ்ந் தெழுதரும்
           காமக் கட்டுரை கனியென வளைஇத்
           தாமக் கோதையொடு தாழ்சிகை திருத்தி
           வளர்ந்தேந் திளமுலை மருங்கிவர்ந்து கிடந்த
     180    பொலங்கல மணிப்பூண் பொலியப் புல்லியவள்
           மனங்கொளத் தேற்றுமோர் மைந்தனைக் காண்மின
 
              (இதுவுமது)
        171 - 181: முற்றிழை..........காண்மின்
 
(பொழிப்புரை) "நிரம்பிய அணிகலன்களையுடையோய்! அவிழ்ந்து சரிந்த கொத்தாகிய கூந்தலை அழகிய கையிலே தாங்கிக்கொண்டு புறத்தேயன்றியும் கள்ளினூடும் அமர்ந்திருக்குந் தேவியே! யான் நினது ஒளிவிடும் நெடிய முகத்தினது ஒளியுடைய அழகினைக் காணக் கருதி வந்ததனையும் எண்ணாமல் இவ்வாறு ஊடல் கொள்குவையாயின் அச்செயல் எனது நெஞ்சகத்தே சுட்டு வருத்துங்காண்!" என்று தனது நெஞ்சம் மலர்ந்து தோன்றாநின்ற காமப்பண்புடைய பொருள் பொதிந்த மொழிகளைக் கற்பகக்கனிபோன்று இனிமையுண்டாகக் கலந்து பேசி அவளுடைய தாமமாகிய கோதையோடும் சரிந்த கூந்தலைத் தன் கையாலே திருத்தி வளர்ந்து அணந்த அவளது இளமுலைப் பக்கத்தே நழுவிக்கிடந்த பொன்னணிகலனும் மணியணிகலனும் மேலும் பொலிவுறும்படி அவளைத் தழுவிக்கொண்டு அவள் மனங்கொள்ளும்படி அவள் ஊடலைத் தேற்றாநிற்பவனைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) முற்றிழை : அன்மொழித்தொகை; விளி. கள்ளினூடு தோன்றும் உருவம் பரத்தையுருவம் அன்று நின் எதிர் உருவங்காண்! என்று தெளிவிப்பான் "கள்ளமர் தேவி!" என்று மீண்டும் விளித்தான். கள்ளினூடும் அமர்ந்த தேவி என்க. கள்ளமர்தேவி என்றது வாருணி என்னுந் தெய்வத்தை என்பாருமுளர். அதனினும் எம்முரை சிறத்தலுணர்க. உள்ளவிழ்ந்து - நெஞ்சு நெகிழ்ந்து. தாமக்கோதை - ஒருவகைமாலை. சிகை - கூந்தல், பொலம் - பொன்.