உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           ஏம முந்நீ ரெறிசுற வுயர்த்த
           காமனும் விழையுங் காமர் காரிகைக்
           கலையுணர் மகளி ருள்ளம் போல
     185    நிலையின் றுழிதரு நெடுஞ்சுழி நீத்தத்து
           வினைதீ ருயிரின் மிதந்தது கீழாப்
           பண்ணமை நெடும்புணை திண்ணிதிற் றழீஇ
           ஆய மாக்களொடு சேய்வழி யோடிக்
           கலந்து காதலி னாடலிற் கைசோர்ந்து
 
              (ஒரு பெண்ணின் ஊடல்)
               182 - 189: ஏமம்..........ஆடலின்
 
(பொழிப்புரை) உலகிற்குப் பாதுகாவலான கடலிலே வாழ்கின்ற கொல்லும் இயல்புடைய சுறாமீனைக் கொடியாக உயர்த்திய காம வேள்தானும் விரும்புதற்குக் காரணமான பேரழகையுடையாள் ஒருத்தி தன் காதலன் ஆடல்பாடல் முதலிய கலைகளை யுணர்ந்த பரத்தைமகளிர் நெஞ்சம்போன்று ஓரிடத்தே நிலையுதலின்று சுழலாநின்ற நெடிய சுழிகளையுடைய வெள்ளத்தின்கண் இருவினைகளும் தீர்ந்து தூய்மையெய்திய உயிர்போன்று நீரினுள் முழுகாமல் மேலே மிதந்ததோர் ஒப்பனை செய்யப்பட்ட நெடிய தெப்பம் தனக்குக் கீழ்ப்படும்படி உறுதியாகப் பற்றிக்கொண்டு தன் கூட்டத்தாராகிய மக்களுடன் நெடுந்தொலை சென்று ஆடா நிற்றலாலே என்க.
 
(விளக்கம்) ஏமம் - காவல். முந்நீர் - கடல். எறிசுற : வினைத்தொகை. காமனும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு, காமன் பிற மகளிரை விரும்பாதவன் என்ப. காமர் - அழகு. காரிகை என்பது ஒருத்தி என்னும் பொருட்டு. மகளிர் ஈண்டுப் பரத்தையர். வினை என்றது ஈண்டு நல்வினை தீவினை யிரண்டையுமாம், "இருள் சேர் இருவினையுந் தீர்ந்த தூயோர் உயிர் அனைத்துலகிற்கும் மேலே சென்று சித்தபதத்தை அடையும் என்பதுபற்றி வினைதீர் உயிரின் மிதந்தது என்றார்.

    "காதலின் ஆடலின்" என்றும் "காதலியாடலின்" என்றும் பாட வேற்றுமைகள் உண்டு. "ஆயமாக்கள் என்றமையானும் நீணீர் நீந்தி நெடும்புணை யொழியத்தன்வயிற் செல்லும் இல்வளக்கொழுநனை" என்றும் பின்னர் வருதலின் "காதலனாடலின்" என்னும் பாடமே சிறந்தமை காண்க.