உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           திருவீற் றிருந்த திருநகர் வரைப்பின்
           உருமீக் கூறு மன்னவ னொருமகள்
           கண்டுகண் ணோராக் காமர் காரிகை
     235    வண்டுள ரைம்பால் வாசவ தத்தை
           பேணி யாடும் பெரும்புனல் விழவினுள்
           நாணிச் செல்லா நல்குர வுடையோர்க்
           கரும்பொறி யணிகல மாரப் பெய்த
           பெரும்பொறிப் பேழை யிவையெனக் கூறிக்
     240   கறைவாய் முரசங் கண்ணதிர்ந் தியம்ப
           அறையவுங் கொள்ளுங் குறையில ராகித்
           துறைதுறை தோறு மிறைகொண் டோருள்
           அணியா தோரை யாராய்ந் துழிதரும்
           பணியா வேந்தன் பணிநரைக் காண்மின்
 
             (அரசனுடைய ஏவலர் செயல்)
               232 - 244: திரு...........காண்மின்
 
(பொழிப்புரை) திருமகள் நெடிது வீற்றிருந்த அழகிய உஞ்சை நகரத்தின்கண் பகைவர்க்கு அச்சம் செய்தலிலே தலைசிறந்தவன் என்று யாவரும் புகழும் பிரச்சோதன மன்னனுடைய ஒப்பற்ற மகள் யாவரும் கண்டு கண்டு கண்களாலே முழுதும் அறியப்படாமையாலே பின்னருங் காண்டற்கு விருப்பம் வருதற்குக் காரணமான பேரழகினையும் வண்டுகள் கிண்டுகின்ற மணமிக்க கூந்தலையும் உடைய வாசவதத்தை விரும்பி ஆடாநின்ற இப்பெரிய நீர் விழவினுள் நல்கூர்ந்திருந்தும் நாணி ஏற்றற்குச் செல்லாத மானமுடைய எளியோர்க்கு வழங்குதற்கென்று அரிய இலச்சினையிடப்பட்ட அணிகலம் நிரப்பப்பட்ட பேழை இவை காண் என்றும் அத்தகையோர் எதிர்வந்து ஏற்றுக் கொள்க! என்றும் கூறி உரல் போன்ற வாயையுடைய அறமுரசத்தைக் கண்ணதிரும்படி அறைந்து முழக்கி அழைப்பவும், வறுமையுற் றிருப்பாரேனும் பிறர்பாற் சென்று இரக்கும் குறைபாடு இல்லாதாராய்த் துறை தோறும் துறைதோறும் தங்கியிருக்கின்ற மேன்மக்களுள் வைத்து அணிகலன் யாதும் அணியாதிருக்கும் நல்குரவாளரை நாடி ஆராய்ந்து யாண்டும் சுழலாநின்ற பிறவேந்தரைப் பணியாத நம் வேந்தனுடைய பணியாளரைக் காணுங்கோள்: என்க.
 
(விளக்கம்) திரு - திருமகள் - செல்வம் என்பது கருத்து. உரு - அச்சம். மீக்கூறுதல் - புகழ்தல். மன்னன் - பிரச்சோதனன். ஒரு மகள் - ஒப்பற்ற மகள். காமர் - காமம் வரும் என்பதன் விகாரம், காரிகை - அழகு, நல்குரவாளராயிருந்தும் ஏற்றலை நாணிச்செல்லா மானப்பண்புடைய மேன்மக்கள் என்பது கருத்து. பொறி - இலச்சினை. கறை - உரல். குறை - குறைபாடு. இறை கொண்டோர் - தங்கியவர். அணியாதோர் - அணிகலனில்லாத வறியோர். உழி தரும் - சுழலும். பணிநர் - பணியாளர்.