உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
245
புழற்காற் றாமரை யழற்போ
தங்கண்
அல்லி மெல்லணைப் பள்ளி
கொண்ட
தார்ப்பூம் பேடை தையல
ரெடுத்த
நீர்ப்போர்க் கவ்வையி னீங்கி
முனாஅ
தொள்ளொளிப் பவளத் துள்ளொளி யடக்கி
250 வெள்ளிப் பூந்தா ரெள்ளுந்
தோற்றத்துப்
போதுபொறை யாற்றாப் புன்னையம்
பொதும்பர்த்
தாதுபுறத் துறைப்பத் தங்கலிற்
றலைபரிந்
திகழ்வி னோக்கமொ டிரைவேட்
டெழுந்த
பவழச் செங்காற் பானிறச் சேவல்
255 திரையுமிழ் பொய்கையு ளிரையுமிழ்ந்து
மயங்கி
|
|
(ஓர் அன்னச் சேவலின்
செயல்) 245 - 255: புழல்.........மயங்கி
|
|
(பொழிப்புரை) உட்டுளையமைந்த
தண்டினையுடைய தாமரையினது தீப்பிழம்பு போன்ற மலரின்கண் அகவிதழாகிய
மெல்லிய அணையின்கண் பள்ளி கொண்டிருந்த கழுத்தில்
வரையினையுடைய அழகிய அன்னப்பெடை ஆங்கு நீராட நின்ற மகளிர் மேற்கொண்ட
நீர்ப்போரின் ஆரவாரத்தாலே அஞ்சித்தன் முன்னிடத்தே உளதாகிய மிக்க
ஒளியையுடைய பவளம் போன்ற நிறமுடைய ஒளியை உள்ளுறைப்புக்களின்
அகத்தே அடக்கி, வெள்ளி மலர்களாலியன்ற மலர்மாலைபோன்ற
தோற்றமுடைய தனது வெள்ளிய அரும்புச்சுமையைத் தானும் தாங்கமாட்டாத புன்னை
மரஞ் செறிந்த சோலைக்குட் புகுந்து ஆங்கு அப்புன்னையினது
பொன்னிறப் பூந்துகள் தனது முதுகு முழுதும் துளித்தலாலே தன்னிற மறைந்து
பொன்னிற முடையதாய் அச்சோலையிலே தங்குதலானே அப்பெடையின்
பக்கலிலிருந்து முன்னர் அதனை இகழ்தலில்லாத நன்னோக்கத்தினால்
அப்பெடைக்கு இரை கொணரப் பிரிந்து சென்ற பவழம் போன்ற சிவந்த
காலையும் பால் போன்ற நிறத்தையும் உடைய சேவலன்னம், இரையுடன்
மீண்டு வந்து அப்பள்ளியில் தன் பெடையைக் காணாமல்
வெறுப்பினாலே அலையெறியும் அப்பொய்கையில் தான் கொணர்ந்த இரையையும்
உமிழ்ந்துவிட்டுப் பெரிதும் மயக்க மெய்தி என்க.
|
|
(விளக்கம்) புழல் -
உட்டுளை. அழற்போது - தீப்பிழம்பு போன்ற மலர். அல்லி - அகவிதழ்.
தார் - கழுத்தின் கண்ணுள்ள வரை. நீர்ப்போரின் - நீராட்டின்கண்
செய்யும் விளையாட்டுப் போர். கவ்வை - ஆரவாரம். புன்னையரும்புகள்
தமது பவளத்தன்ன உள்ளொளியை அடக்கி வெள்ளிப் பூந்தார்
போன்று அரும்பின என்பது கருத்து. தாது - பூந்துகள். இகழ்வில் நோக்கம் -
நன்னோக்கம். தலைபரிந்து - நீங்கி.
|