உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
மதிபுரை தாமரைப் பொதிபோது
புல்லியஃ
தன்மையி னழிந்து புன்மையிற்
புலம்பி
அருப்பிள முலையவ ரடைகரை
வைத்த
மருப்பியல் செப்பை மதித்த தாகி 260
அழல்வெங் காமத் தன்புதலைக்
கொண்ட
மழலைத் தீங்குரன் மருட்டி
யழைஇக்
குறுகச் சென்றத னுறுநோக்குப்
பெறாது
புன்னையம் பள்ளிப் பொழிறொறு
நாடும்
அன்னப் புள்ளி னலமரல் காண்மின்
|
|
(இதுவுமது) 256 - 264:
மதிபுரை.........காண்மின்
|
|
(பொழிப்புரை) திங்கள் மண்டிலம்
போன்ற வெண்டாமரைப் பேரரும்பினைத் தனது பெடையன்னம் என்று கருதி
அருகணைந்து தழுவி, அது பெடையல்லாமை கண்டு நெஞ்சழிந்து தனது
பேதைமையாலே வருந்திக் கோங்கரும்பு போன்ற முலையினையுடைய மடவார்
அப்பொய்கையினது நீரடைகரையின் கண் வைத்த யானை மருப்பாலியற்றிய
வெண்செப்பினைத் தன் பெடை யன்னம் என்று மதித்து நெஞ்சுழலுதற்குக்
காரணமான வெப்பமுடைய காமத்தன்பினைத் தன்பாற் கொண்ட மழலையாகிய
இனிய தனது குரலாலே அப்பெடையை மருள்வித்து அழைத்து அதனருகிற்
சென்று அச்செப்பினின்றும் தனது காம நோக்கிற்குப் பொருந்திய
எதிர்நோக்கினைப் பெறாமல் அந்தப் புன்னையம் பூம்பொழில் தோறும்
அப்பெடையுளதோ என்று தேடாநின்ற அவ்வன்னச் சேவலின் சுழற்சியைக்
காணுங்கோள் என்க.
|
|
(விளக்கம்) மதி -
திங்கள். பொதி போது - கூம்பிய மலருமாம் - அரும்புமாம். செப்பைப்
பெடையென்று மதித்ததாகி என்க அப்பெடையை நாடும் என்க.
அலமரல் - சுழற்சி
|