உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
     265    நானந் தோய்த்த நறுமென் கூந்தலுள்
           ஆனைந்து தெளித்து நீரிடை மூழ்கி
           ஆவிரை யலரு மறுகையுஞ் செரீஇக்
           கொட்டுமடி விரித்த பட்டுடைத் தானையள்
           அங்கோற் றீந்தொடைச் செங்கோட் டியாழின்
     270    பத்த ரன்ன மெத்தெ னவ்வயிற்றுத்
           திரையொடு பட்டு நுரையொடு மறுகி
           மட்டூண் மறுத்த பட்டினிப் படிவமொடு
           கட்டளை பிழையாப் பட்டுடை யல்குலள்
           பெட்ட வாய்மொழிப் பெரும்பா குதிர
     275    எதிர்ப்புன லாடுநர்க் கேம மாகப்
           புனற்றுறை விடுத்த பொங்குமடைப் புழுக்கலைக்
 
             (ஓரந்தணன் செயல்)
          265 - 276: நானம்.........புழுக்கலை்
 
(பொழிப்புரை) பிறர் விரும்புதற்குக் காரணமான இனிய வாய்மொழியையுடைய பாகீரதி என்னும் அத்தேவராட்டி நறுமண நெய் தடவிய நறிய மெல்லிய கூந்தலையுடையளாய்ப் பால் முதலிய ஆப்பயன் ஐந்தனையும் கூட்டித் தலையிற் றெளித்துக்கொண்டு நீரின்கண் முழுகிப் பின்னர் ஆவிரை மலரையும், அறுகம்புல்லையும் கூந்தலிலே செருகிக் கொண்டு, கொட்டி மடித்த தூயபட்டாடையாகிய உடையை உடுத்தியவளாய் அழகிய நரம்பினது இனிய கட்டினையுடைய செங்கோட்டியாழினது பத்தர் போன்ற மெத்தென்ற வயிற்றினையும் நீர் நுரை போன்று மெல்லிதாய் அளவு குறையாத பட்டினை மடிப்புக் குலையாமற் சுற்றிய அரையினையும் உடையளாய்க் கள்ளுணவை விட்ட பட்டினியையுடைய விரத வேடமுடையவளாய் எதிரேயுள்ள நீரிலே ஆடுவார்க்கெல்லாம் இன்பம் உண்டாக என்று வேண்டி அப்புனற்றுறையிலே கடவுட் பலியாக விட்டுப்போன பொங்கிய மடைச் சோற்றினை என்க.அவ்வன்னச் சேவலின் சுழறசியைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) பாகீரதி என்பவள் தெளித்து மூழ்கிச் செரீஇத் தானையளாய் வயிற்றையும் அல்குலையும் உடையளாய் ஆடுநர்க்கு ஏமமாக விட்டுப்போன மடைப் புழுக்கலை என்க. நானம் - மணநெய். ஆனைந்து - ஆநீர். ஆப்பி, பால், தயிர், நெய் என்னும் ஐந்தனையும் கூட்டிய கூட்டுப் பொருள். அறுகை - அறுகம்புல். கோல் - நரம்பு. பத்தர் - யாழின் உறுப்பினுளொன்று. மறுகி : உவமவுருபு. நுரையொடு மறுகித் திரையொடு பட்டுக் கட்டளை பிழையாய் பட்டுடை அல்குலள் என இயைக்க. திரை - மடிப்பு. மட்டூண் - கள்ளுணவு. படிவம் - விரத வேடம். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுமென வேண்டிக் கடவுட்கிட்ட மடைப் புழுக்கல் என்க. மடை - பலி. புழுக்கல் சோறு.