உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           காக்கை யோட்டி நோக்கி னுண்டு
           வேண்டல னாயினும் விறலுஞ் சேனையும்
           நீண்ட விஞ்சியு நிறைமணி மாடமும்
     280    உருக்குறு நறுநெய் யுள்ளுறப் பெய்த
           புழுக்கலொடு பாற்சோ றாயின வாயின்
           வழுக்க லின்றியென் வயிற்றக மார
           உண்ப லென்றுதன் கண்பனி வாரக்
           கொள்ளா வயிற்றி னாண்ட கையன்
     285    செல்வோற் கண்டு பொள்ளென நக்கு
 
             (இதுவுமது)
         277 - 285: காக்கை........நக்கு்
 
(பொழிப்புரை) ஒரு பார்ப்பன மகன் தான் முன்னரே விலாப் புடைக்க உண்டுவிட்டமையாலே இப்பொழுது உண்ணுதல் கூடாமையின் தனது பேராசையாலே அச்சோற்றின்கண் வீழும் காக்கைகளை ஓட்டிப் பாதுகாத்து அச்சோற்றினைத் தனது கண்ணாலேயே உண்பான் போன்று விரும்பிப் பார்த்து எடுத்துச் செல்பவன்! ''அம்மம்ம யான் இவ்வெற்றியுடைய உஞ்சை நகரத்தையும், அதன் நெடிய மதிலையும், நிறைந்த மணி மாடங்களையும் எனக்கு வழங்குவாரேனும் வேண்டுகின்றிலேன். ஆயினும் உருக்குதலையுடைய நறிய நெய்யினை அகமெல்லாம் பொருந்தப் பெய்து அட்ட சோற்றுத் திரளோடே பாற்சோறாகிய உண்டியும் கிடைக்கப் பெறுமாயின் அவற்றில் சிறிதும் சிதறிப் போகாதபடி என் வயிறாரத் தின்பேனே !'' என்று தன் கண்களிலே இன்பக் கண்ணீர் ஒழுக உண்டற்கு இடந்தராத தனது நிரம்பிய வயிற்றையும் ஒரு கையாற் றடவியவனாய்ச் செல்லு மவனை, எதிரே வந்த மற்றொரு பார்ப்பான் கண்டு பொள்ளெனச் சிரித்து என்க.
 
(விளக்கம்) உஞ்சேனையும் அதன்கண் அமைந்த இஞ்சியும் மாடமும் எனக்குத் தரப்படினும் அவற்றைப் பொருளாக மதித்துக் கொள்ளேன் என்க. அயினி - உண்டி, வாயின் - வாய்த்தால். இன்பக் கண்ணீர் வார என்க. வயிற்றினை ஆண்டகையன் என்றது, வயிற்றைத் தடவுகின்ற கையை உடையன் என்றவாறு. பொள்ளென : விரைவுக் குறிப்பு.