உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           அரையிடை நெகிழ வசைத்தல் செல்லார்
           இறுமென நுடங்குஞ் சிறுகொடி மருங்கின்
           மதுகை யோரா மறங்கூர் மனத்தர்
           எதிர்நீர் தூஉ மிளையோர் திருமுகத்
     300   தாழ மிகவா வரிபரந் தகன்ற
           மாழை யுண்கண் மலரென மதித்துத்
           தண்செங் கழுநீர் தகைமலர்த் தாதும்
           ஒண்செந் தாமரைப் பைம்பொற் றாதும்
           ஆராய்ந் துழிதரு மஞ்சிறை வண்டினம்
     305   ஓராங்கு நிலைபெற் றுண்ணெகிழ்ந் தவிழ்ந்த
           பேரா விவையெனப் பேர்தல் செல்லா
           மொய்த்தலின் மற்றவை மொய்ப்பி னீங்கத்
           தத்தரி நெடுங்கண் டகைவிரல் புதைஇப்
           புதுமண மகளிரிற் கதுமெனத் தோன்றும்
     310    மதுர மழலை மடவோர்க் காண்மின
 
             (சில பெண்களின் செயல்)
           295 - 310: நுரையொடு.........காண்மின்
 
(பொழிப்புரை) தாம் ஆடா நின்ற நீரினது நுரையோடு முகிழ்கின்ற நுண்ணிய நூலானாகிய வெள்ளிய ஆடை தமது அரையின்கண் நெகிழா நிற்ப அவற்றை மீண்டும் இறுக யாத்தலுஞ் செய்யாராய்க் கண்டோர் ஒடியும் என்று இரங்கும்படி துவளாநின்ற சிறிய கொடிபோன்ற தமது இடையினது வலியின் தன்மையையும் சிந்தியாராகவும் தமது எதிர்மகளிரின்பால் இகல் மிகா நின்ற மனத்தையுடையராகவும் நீரின் ஆழத்தின்கட் செல்லாமல் தமது முன்னின்று ஒருவர் எதிரே ஒருவர் நீர் விசா நின்ற இளைய மகளிருடைய அழகிய முகத்தின் கண்ணே செவ்வரி பரந்து அகன்றுள மதர்ப்புடைய மையுண்ட கண்களை நீலமலர்கள் என நினைத்து அப்பொய்கையின்கண் தண்ணிய செங்கழுநீர் மலரினது அழகிய தாதுகளையும் ஒளியுடைய செந்தாமரை மலரினது பசிய பொன் போன்ற தாதுகளையும் நாடிச் சுழலா நின்ற அழகிய சிறகுகளையுடைய வண்டினம் அக்கண்களிடத்தே ஒரு படித்தாக வந்து மொய்த்து இம்மலர்கள் அகத்தே நெகிழ்ந்து மலர்ந்துள்ளன ஆதலால் கூம்பமாட்டா என்று தாமும் நீங்காவாய் மொய்த்தலானே அவ்வண்டுகள் அங்ஙனம் மொய்த்தலினின்றும் நீங்கும் பொருட்டுத் தமது வரியோடிய நெடிய கண்களைத் தமது அழகிய விரல்களாலே புதைத்துக் கொண்டு புதுமணப் பெண்போல விரைந்து மாறித் தோன்றா நின்ற இனிய மழலை மொழியினையும் மடப்பத்தையும் உடைய அம்மகளிர் குழாஅத்தைக் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) மருங்கின் - இடையினது. மதுகை - வலி. மறம் - இகல். ஆழம் இகவா இளையோர் எனவும், எதிர் நீர் தூவும் இளையோர் எனவும் தனித்தனி இயைத்துக் கொள்க. மாழை - மதர்ப்பு. தகை - அழகு. பேரா - மாறுபடா; அஃதாவது கூம்பமாட்டா என்க. பேர்தல் செல்லா : ஒரு சொல், மொய்ப்பின் - மொய்த்தலின் அரிதத்தும் கண் என்க.