உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
40. உவந்தவை காட்டல் |
|
எழுதி யன்ன வேந்துநுண்
புருவம்
முழுதுநுத னெருங்க முரிய
வேற்றிச்
செதும்பற் றாமரைச் செவ்விதழ்
போலப்
பதம்பார்த்து மலரும் பனிமலர்த் தடங்கண்
325 கையிகந்து சிவப்ப வெய்துபட
வுயிரா
நிரைகொ ளற்புத்தளை நெரிய
வூர்தரும்
புலவி நோக்கத்துப் பூந்தொடி
புலம்பி
நீர மகளிரொடு நிரந்துட
னின்ற சூர
னிவனெனச் சொல்லுங் குறிப்பினள்
330 பேரு முள்ளமொடு பிறக்கடி யிடுதலின்
|
|
(இதுவுமது) 321 - 330:
எழுதி.........இடுதலின்
|
|
(பொழிப்புரை) ஓவியமாக எழுதி
வைத்தாற் போன்ற எழிலுடைய உயர்ந்த நுண்ணிய தனது புருவமிரண்டும்
சினத்தாலே நெற்றியில் ஏறி நெருங்கி வளையும்படி ஏற்றிச்
சேற்றின்கண்ணதாகிய தாமரை மலரின் கதிர்வரவு கண்டு மலரும் சிவந்த
அகவிதழ் போன்று காதலனுடைய காமச்செவ்வி தேர்ந்து மலர்வனவும் குளிர்ந்த
அம்மலர் போல்வனவும் ஆகிய தனது பெரிய கண் மிகப் பெரிதும் சிவவாநிற்ப
வெப்பம் உண்டாக உயிர்த்துத் தொடர்புகொண்டுள்ள தனது அன்பாகிய
கட்டு விட்டுப் போம்படி தன்னெஞ்சத்தே தோன்றிய ஊடலைக்
காட்டும் பார்வையுடனே அழகிய வளையலையுடைய அங்நங்கை வருந்தி இவன் நீர
மகளிரோடே நீராடுதலைச் செய்யுமொரு சூரன் என்று குற்றங் கூறுமொரு
குறிப்போடே அவனைப் பிரிந்து போகக் கருதும் நெஞ்சத்தோடு தனது அடியைப்
பின்னர் இட்டு இறங்கா நிற்றலானே என்க.
|
|
(விளக்கம்) செதும்பல் - சேறு. பதம் - ஊடலுணரும் செவ்வி. கையிகந்து - எல்லையின்றி.
நிரை - தொடர்ச்சி. அற்புத்தளை - அன்பாகிய பிணைப்பு. தன் நிழலை இவள்
நீரரமகள் என்றும் தன் கணவன் அவளோடு நீராடுகின்றான்
என்றும் கருதினாள் என்பது கருத்து. பிறக்கு - பின்.
|