உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           நண்ணிய காதலி கண்ணிய துணர்ந்து
           காளை போந்தவள் சிறுபுறங் கவைஇப்
           பூளை மெல்லணைப் பொதியவிழ்ந் தன்ன
           மென்றோ ணெகிழப் பற்றிக் குன்றா
     335   அழல்புரை வேகத்து ளற்புநீ ராட்டிச்
           சிறுவரைத் தணித்தவ டிருமுகந் திருத்தி
           நீரர மடந்தையுங் கணவனு மிதனுள்
           ஆர்வ வுள்ளமொ டானோர்க் காணகம்
           ஏகென வுய்த்துத்த மிருநலங் காட்டி
     340   வேக வூட லவள்வயி னீக்கி
           உருவக் கோலமொ டோம்பல் செல்லா
           தொருவயி னாடு மிருவரைக் காண்மின்
 
             (இதுவுமது)
       331 - 342: நண்ணிய..........காண்மின்
 
(பொழிப்புரை) அதுகண்ட காதலன் தன் காதலி கருதியதனை அறிந்து அவள்பால் வந்து அவளது முதுகுப்புறமாக நின்று அணைத்துப் பூளைப்பூவானாய மெல்லிய அணை கட்டவிழ்ந்தாற்போன்ற மெல்லிய அவளுடைய தோள் நெகிழும்படி பற்றிக் கொண்டு தணியாத தீயை யொத்த அவளுடைய சினத்தின்மீது நீரையொத்த தனது அன்பினைப் பொழிந்து சிறிது போழ்தினுள் அச்சினத்தை ஆற்றி அவளுடைய அழகிய முகத்தைத் திருத்தி 'அன்புடையோய் ! ஒரு நீரரமடந்தையும் அவள் காதலனும் இவ் வெந்திரவாவியுள்ளே ஆர்வமுடைய நெஞ்சுடனே நீராடாநின்றனர் காண் ! என்னோடு வருதி, நாம் அவ்விருவரையும் காண்பேம் ! என்று கூறி அவளை அழைத்துப் போய்த் தம் இரண்டு எதிருருவங்களும் நீரிற்றோன்றுதலைக் காட்டி அவட்கு உண்மை யுணர்த்தி அவளது சினமிக்க ஊடலை அகற்றி அழகிய நீர்விளையாட்டொப்பனையோடும் ஒழிவின்றி ஓரிடத்தே நீராடாநின்ற அக் காதலரிருவரையுங் காணுங்கோள் என்க.
 
(விளக்கம்) கண்ணியது - கருதியது. சிறுபுறம் - பிடர். புரை - உவமவுருபு. வேகம் - சினம்: அற்புநீர் - அன்பாகிய நீர். சிறுவரை - சிறிதுபொழுதில். தமது இருவருடைய எதிருருவத்தின் அழகு என்க: ஓம்பல் செல்லாது: ஒரு சொல், ஓம்பாமல்; ஒழியாமல்.