உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           ஒருமீக் கொற்றவ னுடைப்பொரு ளுடைய
           செருவார் சேனைப் பெருவா ணிகன்மகள்
     345    தன்னொடு நவிலத் தன்னை மார்கள்
           கலத்திற் றந்த நலத்தகு விழுச்சீர்
           வேறுபடு திருவினுள் விளங்கிழை மகளிரைக்
           கூறுபட நிறீஇக் குளித்தன ளெழுவோள்
           மின்னிருங் கூந்தன் மேதகப் புனைந்த
     350    பொன்னரி மாலையைப் புனல்கொண் டீர்ப்ப
           அத்துறை மருங்கி னயற்றுறை யாடும்
           மைத்துன மன்னன் கைப்படுத்து வந்துதன்
           சென்னி சேர்த்தியவண் முன்னர்த் தோன்ற
           நெடும்புணை தழீஇ நீத்தொடு மறலத்
 
             (சேனைவாணிகன் மகள் செயல்)
                343 - 354: ஒரு........மறல
 
(பொழிப்புரை) ஒப்பற்ற சிறப்புடைய பிரச்சோதன மன்னவனுடைய குடிகளுள் வைத்துப் பெரும் பொருளுடையவனும், தனக்கெனப் போர்த்தொழிற் பயிற்சியுடைய சேனையை யுடையவனும், ஆகிய பெருங்குடி வாணிகன் ஒருவனுடைய செல்வமகன் தன் தமையன்மார் தன்னோடு பயிலுதற்பொருட்டு மரக்கலத் தேற்றிக் கொணர்ந்த பெண்மை நலத்தாற் றகுதிமிக்க பெருஞ்சிறப்புடைய பல்வேறு வகைச் செல்வத்தையுடைய விளங்கும் அணிகலனையுடைய தன் தோழியராகிய மகளிரைப் பகுதிபகுதியாக நீரினுட் கூறுபடுத்து நிறுத்தி அவரிடையே நீரினுள் மூழ்கி எழுகின்றவளுடைய கரிய கூந்தலின்கண் மேன்மையுண்டாக அணியப்பட்ட மின்னும் பொன்னரிமாலையை நீர்கவர்ந்து இழுத்துச் செல்லுதலாலே அத்துறைக்கு அயலிலுள்ள துறையின்கண் நீராடுகின்றவனும், அவட்கு மைத்துன முறைமையுடைய குறுநில மன்னன் மகனும் ஆகிய ஒருவன் அம்மாலை யைத் தன் கையகப்படுத்தித் தனது தலையிலே அதனை அணிந்து கொண்டு அவள் முன்னர்ச் சென்று தோன்றுதற்பொருட்டு நெடிய தெப்பமொன்றனைத் தழுவிக்கொண்டு அந்நீர்ப் பெருக்கினை எதிர்த்து வருதலை கண்டு, என்க.
 
(விளக்கம்) மன்னவனுடைய பெருங்குடிகளுள் வைத்துப் பொருளுடைய வாணிகன் மகள் என்றவாறு "பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான"'' என இளங்கோவும் ஓதுதல் காண்க (சிலப் - மங்கல - 31 - 32)

    அவ்வாணிகன் தன் பொருளைப் பேணிக்கொள்ளும் பொருட்டுச் சேனையும் உடையன் என அவன் சிறப்புணர்த்தியபடியாம். தன்னொடு நவில - தன்னோடு பயிலும் பொருட்டு, தன்னைமார் - தமையன்மார், இவர் இவளோடு பயிலம் வேற்றுநாட்டிலிருந்து கலத்திற்றந்த மகளிர் என்க. கூறுபட நிறுத்தி முழுகுவது தன்னைக் கண்டுபிடிக்கும் பொருட்டு என்க. இஃதொரு விளையாட்டு வகை யென்க. மின் பொன்னரிமாலை என ஒட்டுக. வணிகருள்ளும் வேந்தர் உண்மையின் மைத்துனமன்னன் என்றார். அவன் முன்னர்த் தோன்றும் பொருட்டுப் புணைதழீஇ நீத்தொடு மறல என்க. நீத்து - வெள்ளம். மறலுதல் - எதிர்த்துச் செல்லல்.