உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           மின்னவிர் மணிப்பூண் மன்னவன் மடமகள்
           அங்கலுழ் பணைத்தோட் செங்கடை மழைக்கண்
           நங்கை யாடும் பொங்குபுனற் பூந்துறைக்
           குங்குமக் குழங்கல் கொழுங்களி யாக
     370    இத்துறை மேவ வெத்துறை யாயினும்
           ஆடன்மின் யாவிரு மாடுவி ருளிரெனின்
           ஆடகப் பொன்னினும் மளவி னியன்ற
           பாவை யாகும் படுமுறை யதுவெம்
           கோவி னாணை போமி னீவிரெனத்
 
             (துறைகாக்குங் காவலர் செயல்)
           366 - 374: மின்னவிர்..........நீவிரென
 
(பொழிப்புரை) மின்னல் போன்று ஒளிரும் மணிகள் பதித்த அணிகலன்களையுடைய நம்மன்னவனுடைய மடப்பமுடைய மகளாகிய அழகொழுகாநின்ற மூங்கில்போன்ற தோளினையும், சிவந்த கடையினையுடைய குளிர்ந்த கண்ணையும் உடைய வாசவதத்தை நீராடாநின்ற, பொங்காநின்ற நீரையும் மலர்களையும் உடைய இந்நீர்த்துறை, நீயிர் அணிந்த குங்குமக்குழம்பு முதலியவற்றாற் கொழுவிய சேறாகிக் கலங்கும்படி இந்தத்துறைக்கு மேலே உள்ள எந்தத்துறையினும் யாரும் நீராடாதே கொண்மின் ! இக்கட்டளையை முரணி யாரேனும், நீராடுவீர் உளீராயின், அக்குற்றத்திற்குரிய தண்டனையாக நும்மளவுடைய ஆடகப் பொன்னாற் செய்யப்பட்ட பாவையொன்றனை நீயிர் இறுத்தல் வேண்டும் ; இத்தண்டனை என்மன்னவன் கட்டளையாகும் ; ஆதலால் நீவிரெல்லாம் அத்துறைகட்குச் செல்லாமல் கீழ்த்துறைகட்கு நீராடப் போமின்' என்று கூறி என்க.
 
(விளக்கம்) போமின் என்றுகூறி நண்ணிய (381) காவலர்க் காண்மின் (382) என இயையும். அம் - அழகு. நங்கை - வாசவதத்தை, குழங்கல் - சேறு, மேலே உள்ள துறையில் நீராடின் இத்துறை சேறாகும் என்றவாறு. களி - சேறு. இத்துறை என்றது வாசவதத்தை ஆடுந்துறையை. மேலே : பலவறிசொல், ஆடகப்பொன் - ஒருவகைப்பொன். அளவு - எடை. படுமுறை - தண்டம். அரசனுக்குப் பிழைசெய்தோர் தமது எடையுள்ள பொன்னாற் செய்யப்பட்ட பாவையைத் தண்டமாக இறுக்கும் வழக்குண்மையை 'மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை, புனறரு பசுங்காய் தின்றதன்றப்பற், கொன்பதிற் றொன்பது களிற்றொடவணிறை, பொன்செய் பாவை கொடுப்பவும்' எனவரும் குறுந்தொகைச் செய்யுளானும் உணர்க(292).