உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
40. உவந்தவை காட்டல்
 
         
           தென்மலைப் பிறந்த பொன்மருள் சூரல்
           கருங்கண் டோறும் பசும்பொன் னேற்றித்
           தொடித்தலைப் படுகோல் பிடித்த கையர்
           வரிக்குப் பாயத்து வார்பொற் கச்சையர்
           திருப்புன லாடிச் செயிர்த்த நோக்கினர்
     380   முழுநீர் விழவின் மூவெழு நாளும்
           கழுநீர்ப் பெருந்துறைக் காவ னண்ணிய
           வண்டுஞ் சேரா வஞ்சுவரு சீற்றத்துக்
           குண்டுதுறைக் காவலர் குழாஅங் காண்மின்
 
             (இதுவுமது)
         375 - 383 : தென்மலை.........காண்மின்
 
(பொழிப்புரை) பொதியமலையிலே தோன்றி பொன்போன்ற நிறமுடைய பிரம்பினது கரிய கணுக்கடொறும் பசிய பொற்குழம்பு பூண்தீற்றப்பட்டுத் தலையிலே பூண்கட்டப்பட்ட வலிய கோலினைப்பற்றிய கையை யுடையவரும், வரியமைந்த மெய்ப்பையையணிந்து நெடிய பொற்கச்சைக் கட்டியவரும், அழகிய சினமுடைய நோக்கினை யுடையவரும், முழுமையுடைய திருநீராட்டுவிழா நிகழாநின்ற இருபத்தொருநாளும் தாமும் அழகிய அந்நீரினாடுதலோடு தீவினைகளைக் கழுவும் நீர்மையுடைய அப் பொய்கையினது பெரிது துறைகளைக் காத்தலும் மேற்கொண்டவரும் வண்டுகளும் தம்மை அணுகமாட்டாமைக்குக் காரணமான அச்சம் வருதலையுடைய சினத்தையும் உடைய ஆழ்ந்த பொய்கைத் துறையினைக் காக்கின்ற காவலருடைய கூட்டங்களைப் பாருங்கோள்! என்க.
 
(விளக்கம்) தென்மலை - பொதியமலை. இம்மலையிற் றோன்றும் பிரம்பு சிறப்புடையதென்ப. ''பொதியிற் பிரம்பு'' என முன்னுங் கூறப்பட்டது; (1 - 37:9.) சூரல் - பிரம்பு. கருங்கண் - வலிமையுடைய கணுவுமாம். பொன்னேற்றுதல் - பொற்குழம்பு தீற்றுதல். தொடி - பூண், படுகோல் - வலிய கோல். குப்பாயம். மெய்ப்பை; சட்டை. மூவெழுநாளும் நீராடி என்க. குண்டு - ஆழம்.