|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 41. நீராட்டரவம் | |
கிடைப்போழ்ப் பந்தத் திடைப்புனைந் தியற்றிய
5 அவிர்நூற் பூங்கிழி யாப்பினோடு
சார்த்திக்
கட்டளை யமையச் சட்டகங்
கோலிக் கண்டோ
ரின்றியுங் கைந்நவில்
வித்தகர்
கொண்டோர் மருளக் கோலங்
குயிற்றி அம்புவா
யணிந்த பெருந்தண் சக்கரம் 10 சாந்தில் செய்த ஏந்திலை எறிவேல்
போதில் புனைந்த பூம்பொறி வளையம்
மலர் புறத்து அழுத்திய இலைஅணி ஈர்வாள்
பிணையலில் பொலிந்த கணையக் கப்பணம்
சுண்ணம் பொதிந்த வண்ண வட்டுஇணை
15 உருக்குறு..........முள்வாய் சேர்த்தி
அரக்குறு நறுநீர் அஞ்செங் குலிகம்
குங்கும ஊறலோடு கொண்டகத்து அடக்கிய
எந்திர நாழிகை என்றிவை பிறவும்
ஏற்றிப் பண்ணிய இனக்களிறு நிரைஇ 20 மாற்று
மன்ன ராகுமி
னெனத்தம் உரிமை
மகளிரொடு செருமீக்
கூறிக் ; கரைசென்
மாக்கள் கலாஅங்
காமுறூஉம் அரைச குமர
ரார்ப்பொலி யரவமும்
| | 4 - 23:
கிடை..........அரவமும்
| | (பொழிப்புரை) நெட்டியின் பிளவாகிய சந்தியினாற் கை செய்தியற்றிய விளங்காநின்ற நூலானும், அழகிய துணிக்கட்டோடும்
சேர்த்து அளவமையும்படி சட்டத்தை வளைத்து முன்னர் யாருஞ் செய்தறியாதபடி தமது கைத்தொழிற்றிறத்தாலே விலைக்குப் பெற்றோர் மருளும்படி ஒப்பனைசெய்து அம்புபோன்ற வாயமைத்த பெரிய குளிர்ந்த சக்கரப்படையும், சந்தன விழுதாலே செய்த ஏந்திய இலையையுடைய மாற்றார்மேல் எறிதற்கியன்ற வேற்படையும், மலராலேயே இயற்றிய அழகிய புள்ளியமைந்த பாரா வளையம் என்னும் படையும், மலர்களைப் புறத்தே பதித்த இலைகளால் அழகு செய்யப்பட்ட ஈர்வாட்படையும், பிணைத்த மாலை யாலே செய்து பொலிவுடைத்தாகிய கணையக்கப்பணம் என்னும் படையும், சுண்ணப்பொடி நிரம்பிய வண்ணமூட்டிய இணைவட்டும், உருக்குதலுற்ற.....உள்ளிடத்தே சேர்த்துச் செந்நிறமூட்டப்பட்ட பனிநீரும், சாதிலிங்கம் கரைத்த நீரும், குங்குமப்பூவூறவைத்த நீரும், ஆகிய இன்னோரன்ன நறுமணநீரை அகத்தே அடக்கி வைக்கப்பட்ட எந்திரநாழிகை யென்னும் நீர்வீசுங் கருவியும், தாரையும், பந்தும், கோடும், சிவிறியும், இன்னோரன்ன பிறவும் ஆகிய நீர்விளையாட்டுக் கருவிகளை ஏற்றி ஒப்பனை செய்யப்பட்ட ஓரினமாகிய களிற்றியானைகளை வரிசையாக நிறுத்தி அரசர் மக்கள் தத்தம் காதலிமாரையே தன்பகைமன்னராகுமின் என்று கூறித் தத்தம் எதிரெதிர் நிறுத்திவைத்து அப்பகைவரோடு முற்கூறப்பட்ட போர்க்கலன்களாலே போர் செய்தற்கண் முனைந்து செய்கின்ற ஆரவாரமும், இப்போரினைக் காண்டற்குப் பெரிதும் விரும்புமியல்புடைய கரையிற்செல்கின்ற மக்கள் இப்போர் கண்டு செய்யும் ஆரவாரமும் என்க.
| | (விளக்கம்) அரசர்
மக்களும், அவர்தம் காதலிமாரும் சக்கரம் முதலிய நீர்விளையாட்டுப்
போர்க்கருவிகளை ஏற்றிப் பண்ணுறுத்தப் பட்ட யானைகளிலே ஏறி அவற்றுள்
ஆடவர் ஏறிய யானைகளை ஓரணியாகவும் மகளிர் ஏறிய யானைகளை ஓர் அணியாகவும்
ஒன்றற் கொன்று எதிரெதிர் பகைவர்படை போனிறுத்தி அப்படைக் கலன்களை
எறிந்து விளையாட்டுப் போர்நிகழ்த்தி ஆரவாரிக்கின்றனர்
என்பதாம். கிடைப்போழ் - நெட்டியினது பிளப்பு. கிழியாப்பு - துணிக்
கட்டு. சட்டகம் - சட்டம். சாந்து - சந்தனவிழுது. வளையம் -
பாராவளையம். கணையக் கப்பணம் - ஒருவகைப்படைக்கலம். ஊறல் - ஊறவைத்த
நீர். எந்திரநாழிகை - நீர்வீசுங் கருவிகளில் ஒன்று. மாற்றுமன்னர் -
பகை மன்னர். உரிமை மகளிர் - தேவிமார். கலாஅம் - போர்.
கலாஅம் காமுறும் மாக்கள் கரைசென் மாக்கள் எனத் தனித்தனிகூட்டுக.
மாக்கள் அரவமும் குமரர் ஆர்ப்பொலி அரவமும் என ஈரிடத்தும்
கொள்க.
|
|