உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
         
    30    அறைவரைச் சாரற் சிறுகுடிச் சீறூர்க்
          குறவர் குறைத்த கொய்புன மருங்கின்
          அந்தண் ணகிலுஞ் சந்தனக் குழையும்
          கருவிளங் கோடுங் காழிருள் வீடும்
          திருவிழை கழையுந் தேக்குந் திமிசும்
    35    பயம்புங் கோட்டமுங் கயம்பல கலங்க
          அமிழ்ந்துகீ ழாழ வருங்கலஞ் சுமந்து
          நுரைபுன னீத்தத்து நூக்குவனர் புக்குக்
          கரைமுதற் சார்த்துங் காளைக ளரவமும்
 
        30 - 38: அறை.........அரவமும்
 
(பொழிப்புரை) பாறைகள் அமைந்த மலைச்சாரலின்கண் அமைந்த சிறுகுடி என்னும் சிற்றூர்களிலே வாழாநின்ற குறவர்கள் தமது தினை கொய்யும் புனத்தின் பக்கத்திலே வெட்டிப் போகட்ட அழகிய குளிர்ந்த அகின்மரமும், சந்தனத்தழையும், கருவிளங்கொம்பும், அகக்காழுடைய இரவு மரமும், தேற்றாமரமும், அழகிய விரும்புதற்குக் காரணமான மூங்கிலும், தேக்கு மரமும், திமிசுமரமும், வசம்புமரமும், கோட்டமரமும், ஆகிய இவற்றைக் குறிஞ்சிநிலத்திருந்து புரட்டிக்கொண்டு வழியில் உள்ள மடுக்கள் பலவும் கலங்கும்படியும் வாராநின்ற நீர்ப்பெருக்கினூடே தமது மரக்கலங்களை அஞ்சாமற் செலுத்தி அந்த மரங்களைத் தம் மரக்கலம் நீரின்கண் அமிழ்ந்து கீழே ஆழ்ந்தியங்கும்படி ஏற்றிச் சுமந்து கொண்டு வந்து கரையிலே சேர்க்கின்ற இளங்காளைப் பருவமுடைய மறவர் செய்கின்ற ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) அறை - பாறை. சிறுகுடி - குறிஞ்சிநிலத்துள்ள ஊர் - சிறுகுடியாகிய சிற்றூர் என்க. கொய்புனம் : வினைத்தொகை. குழை - தழை. கோடு - மரக்கொம்பு. திரு - அழகு. பயம்பு - வசம்புமரம். காழ் - வைரம். இருள் மரமும், வீடுமரமும் என்க. இருள் மரம் - இரவு மரம். இதனை இரவு என்றும் கூறுப. (பெருங் 1 - 52 - 40.) வீடு - தேற்றாமரம் இல்லமரம் என்னும் பெயருடையதாகலின் வீடு என்றார். இனி இருள் வீடு மரம் என்றே கொண்டு சோதிமரம் எனினுமாம். கயம் - மடு. காளைகள் அருங்கலம் நூக்குவனர் அவை அமிழ்ந்து ஆழ ஏற்றிச்சுமந்து சார்த்தும் அரவம் என மாறுக.