உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
           முகிழ்நிலா விரிந்த முத்துவடக் கழுத்தினர்
    60    திகழ்நிலா விரிந்த திருமதி முகத்தர்
          செண்ண மாகிய சிகழிகை முடியர்
          வண்ண மகடூஉ வல்லவா வகுத்த
          இரதப் பல்காழ்ப் பரவை யல்குலர்
          பொன்னிறக் கோங்கின் பொங்குமுகிழ்ப் பென்ன
    65    முன்ன ரீன்ற முலைமுதன் முற்றத்து
          மின்னுக்கொடி பிறழுங் கன்னிக் கோலமொ
          டொதுங்க லாற்றா வொளிமலர்ச் சேவடிப்
          பெதும்பை மகளிர் சிலம்பொலி யரவமும்
 
        59 - 68: முகிழ்..........அரவமும்
 
(பொழிப்புரை) தோன்றாநின்ற நிலா வொளி போன்ற ஒளியை வீசாநின்ற முத்துவடமணிந்த கழுத்தையுடையோரும், விளங்காநின்ற நிலவொளி விரிந்த அழகிய திங்கண்மண்டிலம் போன்ற முகத்தையுடையோரும், ஒப்பனைப் பொருளாகிய மயிர் முடியை அணிந்தோரும், தம் ஒப்பனை மகளிர் தாம்தாம் கற்று வல்லவாறு ஒப்பனை செய்யப்பட்ட தேர்போன்ற பலவாகிய மேகலைகளையுடைய பரப்புடைய அல்குலையுடையவரும், பொன்னிறமுடைய கோங்கினது பருத்த அரும்பைப் போன்று தம்மார்பு முன்பக்கத்தே தோற்றுவித்த முலைகளின் முகப் பின் கண் மின்னா நின்ற பொற் கொடி பிறழாநின்ற கன்னிமை அழகோடு நிலத்திலே நடத்தலைப் பொறாத ஒளியுடைய மலர்போன்ற சிவந்த அடிகளையும் உடைய பெதும்பைப் பருவத்து மகளிருடைய சிலம் புகள் முரலாநின்ற ஆர வாரமும் என்க.
 
(விளக்கம்) பேதைப் பருவத்திற்குக் கிண்கிணியும் பெதும்பைப் பருவத்திற்குச் சிலம்பும் சிறப்பணிகள் என்க. செண்ணம் - ஒப்பனை. சிகழிகை - மயிர்முடி. வண்ணமகடூஉ - ஒப்பனை செய்யும் பணிப்பெண். வல்லவா - ஈறுகெட்டது. இரத அல்குல், பல்காழ் அல்குல், பரவையல்குல் எனத் தனித்தனிகூட்டுக. முகிழ்ப்பு - அரும்பு. முற்றம் - முகப்பு. மின்னுக் கொடி ஒரு பொன்னணிகலம். பெதும்பை - இரண்டாம் பருவம். (மங்கைமகளிர்))