உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
           கொடியணி பிறழுங் கொம்மை வெம்முலைக்
    70    கடிகை வேய்நலங் கழிக்கு மென்றோட்
          கொடியென நடுங்குங் கோல மருங்குலர்
          அம்பெனக் கிடந்த வையரி நெடுங்கண்
          மங்கை மகளிர் பைங்கா சரவமும்
 
        69 - 73: கொடி..........அரவமும்
 
(பொழிப்புரை) பொற்கொடி பிறழாநின்ற பருத்த விருப்பமுண்டாக்கும்
  முலைகளையும் மூங்கிற்றுண்டுகளின் அழகைக் கெடா நின்ற பேரழகுடைய
  மெல்லிய தோள்களையும், பூங்கொடி போலத் துவளாநின்ற அழகிய இடை
  யினையும் அம்புபோன்று முகத்திலே கிடந்த மெல்லிய செவ்வரிபடர்ந்த நெடிய
  கண்களையும் உடைய மங்கைப் பருவத்துமகளிர் அணிந்த பசிய மேகலை
  யணிகளின் ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) கொம்மை - பருமை. வேய்க்கடிகை என மாறுக. கடிகை -
  துண்டம். கொடி - பூங்கொடி. மருங்குல் - இடை. ஐ - மென்மை. அரி -
  செவ்வரி. பைங்காசு - மேகலை. இவ்வணி மங்கைப் பருவத்திற்குச் சிறப்பணி
  என்க. இது மூன்றாம் பருவம்.
      (மடந்தைமகளிர்)