உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
         
          நீனிறக் கொண்மூ நெற்றி முள்கும்
    75    வானிற வளர்பிறை வண்ணங் கடுப்பச்
          சின்மெல் லோதி சேர்ந்த சிறுநுதற்
          குலாஅய்க் கிடந்த கொடுநுண் புருவத்
          துலாஅய்ப் பிறழு மொள்ளரித் தடங்கண்
          வம்புமீக் கூரும் பொங்கிள முலையின்
    80    நுடங்குகொடி மருங்கி னுணுகிய நுசுப்பின்
          மடந்தை மகளிர் குடைந்தா டரவமும்
 
        74 - 81: நீனிற..........அரவமும்
 
(பொழிப்புரை) நீலநிறமுடைய முகிலினது உச்சியிலே மூழ்கா நின்ற வெண்ணிறமுடைய வளர்பிறையினது தன்மையை ஒப்பச் சிலவாகிய மெல்லிய கூந்தலிடைச் சேர்ந்த சிறிய நுதலையும், வளைந்து கிடந்த வளைவுடைய நுண்ணிய புருவங்களையும், அவற்றின் கீழே அங்குமிங்கும் உலாவிற் பிறழாநின்ற ஒள்ளிய செவ்வரி படர்ந்த பெரிய விழிகளையும் கச்சினைக் கிழித்து வளராநின்ற பருத்த இளமையுடைய முலைகளையும் துவளாநின்ற பூங்கொடியினது நடுவிடம் போன்று நுணுகிய இடையினையும் உடைய மடந்தைப் பருவத்து மகளிர் நீரின்கண் குளித்து விளையாடுதலாலே உண்டாகும் ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) கொண்மூ - முகில். நெற்றி - உச்சி. முள்கும் - மூழ்கும். வால் - வெண்மை. ஒதி - கூந்தல். வம்பு - முலைக்கச்சு. கொடிமருங்கின் - கொடியின் நடுவிடம். இது நான்காம் பருவம். (அரிவை மகளிர்)