உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
         
    90    பொன்னரி மாலை புனல்பொதிந் தசைதர
          மின்னொசிந் ததுபோற் பொன்னணி பிறழப்
          புனலக மூழ்கிப் பூந்துகில் களையார்
          மணலிகு நெடுந்துறை மங்கலம் பேணிப்
          பெரியோ ருரைத்த பெறலருந் தானம்
    95    உரியோர்த் தரீஇ யுள்ளுவந் தீயும்
          தெரிவை மகளிர் வரிவளை யரவமும்
 
        90 - 96: பொன்..........அரவமும்
 
(பொழிப்புரை) தமது கூந்தலின்கண்ணதாகிய பொன்னரி மாலை நீராலே பொதியப்பட்டு அசையா நிற்பவும், மின்னல் துவள்வது போன்று தமது பொன்னா லியன்ற அணிகலன்கள் நீரினுட் பிறழா நிற்பவும், நீரினூடே முழுகி எழுந்து தமது பூத் தொழிலமைந்த ஈர ஆடையினைக் களையாராய் மணல்திரண்ட நெடிய துறைக்கட் சென்று தமக்கு ஆக்கமுண்டாதலை விரும்பிச் சான்றோர் கூறிய பெறுதற்கரிய தானங்களைப் பெறத்தகுந்த அந்தணரை அழைத்து நெஞ்சுவந்து வழங்காநின்ற தெரிவைப் பருவத்து மகளிருடைய வரியுடைய வளைகளினால் உண்டாகின்ற ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) பொன்னரிமாலை - கூந்தலணி. புனலாற்பொதியப் பட்டென்க. துகில்களையார் என்றது - ஈரஆடையுடன் என்றவாறு. ஈரம்புலரா ஆடையொடு நின்று தானம் வழங்குதல் மரபு. உரியோர் தானம் பெறுந்தகுதியுடைய அந்தணர். மங்கலம் - ஆக்கம்; மங்கல அணியைப் பேணும்பொருட்டு எனினுமாம். கையால் வழங்குதலின் வளையரவஞ் செய்தன என்க. தானமுதலியன செய்தல் இப்பருவத்திற்குச் சிறப்பென்க. இஃது ஆறாம்பருவம். (பேரிளம் பெண்டிர்)