உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம
 
         
          நெடுந்துறை நீந்தி நீலைகொள லறியார்
          கடுங்கண் வேந்தன் காதல ரரவமும்
          கொலைத்தொழில் யானை சென்றுழிச் செல்லாத்
          தலைக்க ணிரும்பிடி பிளிற்றிசை யரவமும்
    120    துறைமாண் பொராஅத் தூமண லடைகரை
          நிறைமாண் குருகி னேர்கொடிப் பந்தர்ப்
          பாடலொ டியைந்த பல்லோ ரரவமும்
          ஆடலொ டியைந்த வணிநகை யரவமும்
          யாற்றொலி யரவமொ டின்னவை பெருகிக்
    125    கூற்றொலி கேளாக் கொள்கைத் தாகி
 
        116 - 125: நெடுந்துறை............ஆகி
 
(பொழிப்புரை) நெடிய நீர்த்துறையின்கண் நீந்தி இளைப்புற்று நிலை கொள்ளுதற்கு இடனறியமாட்டாத தறுகண் மன்னன் மக்கள் எழுப்பும் ஆரவாரமும், கொலைத்தொழிலையுடைய களிற்றியானைகள் சென்ற நெறியிலே செல்லமாட்டாமல் இடையூறுற்றுழிக் கரிய பிடியானைகள் எடுத்த பிளிற்றொலியாகிய ஆரவாரமும், மாட்சிமை நீங்காத துறைக்கண்ணே தூயமணலாகிய நீரடைகரையிடத்தே நிறைந்த மாண்புடைய குருக்கத்திக் கொடிபடர்ந்த பந்தர்களிலே இருந்து பலராகிய பாரைகள் பாடுதலோடே பொருந்திய இன்னிசையாரவாரமும், கூத்தருடைய கூத்தாட்டோடு பொருந்திய மாந்தருடைய அழகியநகைப்பா லுண்டான ஆரவாரமும் ஆற்றினது ஆரவார மும் ஆகிய இத்தகைய பல்வேறு ஆரவாரங்களும் யாண்டும் பெருகுதலாலே மாந்தருடைய பேச்சொலிகள் கேளாத தன்மையுடைத்தாக என்க.
 
(விளக்கம்) வேந்தன் காதலர் - மன்னன் மக்கள், செல்லாத் தலைக்கண் - செல்லமாட்டாது இடையூறுற்றுழி. மாண்பு ஒராசு எனக் கண்ணழிவு செய்க. குருகு - குருக்கத்திக்கொடி. கூத்து - நகைக் கூத்தென்பது போன்ற நகை யரவம் என்றார். யாறு - திருநீர்ப்பொய்கையில் புகும் ஒரு யாறு. இதன்பெயர் ''க்ஷிப்பிராந்தி'' என்று வடநூல்களாற் றெரிகின்றது என்ப. கூற்றொலி - பேச்சொலி. கொள்கைத்து - தன்மைத்து. ஆகி - ஆக. (ஆடவும் உண்ணவும் அமைந்தவை)