உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
            அரைப்பமை சாந்தமு முரைப்பமை நானமும்
          ஒப்புமுறை யமைந்த வோமா லிகையும்
          வித்தகர் வனைந்த சித்திரக் கோதையும்
          காதன் மங்கைய ராகத் தெறியும்
    130    சாதி லிங்கமுஞ் சந்தனத் தேய்வையும்
          உரைத்த வெண்ணெயு நுரைப்பம லரைப்பும்
          பீடுடன் பேராப் பெருந்துறை யெங்கும்
          ஆடவு முண்ணவு மாதர மாகப்
          பேராக் காதலொடு பெருஞ்சிறப் பியற்றி
    135    நீராட் டரவ நிகழுமா லினிதென்.
 
        126 - 135: அரைப்பு...........இனிதென்
 
(பொழிப்புரை) அரைத்தற்றொழிலான் அமைந்த சந்தனமும், உரைத்தற்றொழிலானமைந்த புழுகும், அளந்து கூட்டும் முறையானமைந்த ஓமாலிகையும், சதுரப்பாடுடையோர் புனைந்த சித்திர மலர்மாலையும் காதலையுடைய மங்கையர் மார்பிலே எறிதற் கேற்ற சாதிலிங்கநீரும் சந்தனக் குழம்பும் மணப்பொருள் தேய்த்த வெண்ணெயும் நுரைத்தல்மிக்க அரைப்பு வகைகளும் பெருமையோடு நீங்குதலில்லாத பெரிய அப்பொய்கையினது துறைகளின் யாண்டும் மாந்தர் தாம் விளையாடவும் உண்டுமகிழ்தற்கும் வேண்டுமென நீங்காத விருப்பத்தோடு பெரிய சிறப்புத் தொழில்களைச் செய்து இத்திருநீராட்டுத் திருவிழா பெரிதும் இனிமை யுண்டாக நிகழாநிற்கும் என்க.
 
(விளக்கம்) அரைப்பு, உரைப்பு, தொழில்கள், ஓமாலிகை, இலவங்க முதலிய முப்பத்திரண்டு வகைப்பொருள்களையும் நூல்கூறுமளவாற் கூட்டி இயற்றும் மணநீர். எனவே ஒப்புமுறை அமைந்த ஓமாலிகை என்றார். ஒப்பு - அளவு. சித்திரப்பூமாலை என்க. சாதிலிங்கம் : ஆகுபெயர். அரைப்பு - எண்ணெய் முதலியன போதற்கிடும் பொருள். ஆதரம் - விருப்பம்.

41. நீராட்டரவம் முற்றிற்று.