உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
           அரிமா னன்னதன் பெருமா னகலத்துத்
          திருவுநிறை கொடுக்கு முருவுகொள் காரிகை
          வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையைக்
          கோல்வளை மகளிர் கொட்டையைச் சூழ்ந்த
     15    அல்லியு மிதழும் போல நண்ணிப்
          பல்வகை மரபிற் பசும்பொன் குயின்ற
          ஊர்தியும் பிடிகையுஞ் சீர்கெழு சிவிகையும்
          வையமுந் தேரும் வகைவெண் மாடமும்
          பொறுப்பவு மூர்பவுஞ் செறித்திடம் பெறாஅர்
 
            (வாசவதத்தை நீராட வருதல்)
              11 - 19: அரி..........பெறாஅர்
 
(பொழிப்புரை) சிங்கம் போன்ற தன் கணவனுடைய (உதயணனுடைய) மார்பின்கண் வீற்றிரா நின்ற திருமகட்கு உவமையாக வழங்குதற்கியன்ற வடிவமும் பேரழகும்படைத்த வெள்ளிய சங்க வளையலணிந்த மூங்கில் போன்ற தோள்களையுடைய வாசவதத்தையை அவளுடைய தோழியராகிய திரட்சியுடைய வளையலணிந்த மகளிர் பொற்றாமரைமலரினது பொகுட்டினைச் சூழ்ந்த அகவிதழ்களும் ஏனைப் புறவிதழ்களும் போன்று சூழ்ந்து கொண்டு பலவேறு வகையினையுடைய பசிய பொன்னாலி யற்றப்பட்ட ஊர்திகளையும் பிடிகையையும் சிறப்புடைய சிவிகைகளையும் வண்டிகளையும் தேர்களையும் பலவகைப்பட்ட வெள்ளிய நீர்மாடங்களையும் இன்னோரன்ன சுமக்கப்படுவனவும் ஊரப்படுவனவுமாகியவற்றை ஏறி நெருங்கச் செய்து மேலே இயங்குதற்கு இடம் பெறாராகி என்க.
 
(விளக்கம்) அரிமான் - சிங்கம். தன் பெருமான் என்றது உதயணகுமரனை. திருவு - திருமகள். நிறை - உவமை. உருவும் காரிகையும் என்க. காரிகை - அழகு. கொட்டை - தாமரைப் பொகுட்டு. அல்லி என்றது - பொகுட்டைச் சூழ்ந்துள்ள பட்டுக்குஞ்சம் போன்ற சிற்றிதழ்களை. இவை சிறப்புடைய மகளிர்க்குவமை. பொறுப்ப ஊர்ப என்பன பலவறிசொற்கள். பொறுப்ப - சிவிகை முதலியன. ஊர்ப - வையமுதலியன. இவற்றில் ஏறிச்செறித் தென்க.