உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
42. நங்கை நீராடியது |
|
20 நேமி வலவ னாணை
யஞ்சிப் பூமி
சுவர்க்கம் புறப்பட் டாங்குத்
தீட்டமை கூர்வாள் கூட்டொடு
பொலிந்த வேற்றிற
லாளரு மிலைச்சருஞ் சிலதரும்
கோற்றகை மாக்களு நூற்றுவில் லகலம்
25 குறுகச் செல்லாச் செறிவுடைக்
காப்பிற் பெருங்குடி
மூதூர் மருங்கணி பெற்ற
அருங்கடி வாயிலொடு துறைதுறை தோறும்
|
|
(இதுவுமது) 20 - 27:
நேமி..........தோறும்
|
|
(பொழிப்புரை) சக்கரவர்த்தியாகிய பிரச்சோதனனுடைய ஆணைக்கு அஞ்சி நிலவுலகத்திற்கு
வரும்பொருட்டு மேனிலையுலகம் புறப்பட்டாற் போலே தீட்டுத லமைந்த கூரிய
வாள்கள் உறையுடனே பொலிவு பெற்றவரும் வேற்படையிற்றிறல் மிக்க மறவரும்
மிலேச்சரும் ஏவலரும் கோலாலே தடுக்கின்ற காவன்மாக்களும் என்னு மிக்
காவலர்கள் ஒரு நூறுவிற்கிடைத் தொலைவினின்று காப்பதன்றித் தம்மை
அணுகிவருதலில்லாத பாதுகாவலோடு பெரிய காவலையுடைய நகரத்தின்
பக்கத்தே அரிய காவலையுடைய வாயில்களிடத்தும் துறை தோறும் என்க.
|
|
(விளக்கம்) நேமிவலவன் -
சக்கரவர்த்தி, நிலவுலகத்தினின்றும் வானுலகம் புறப்பட்டாற் போன்றென்க.
மிலைச்சர் - மிலேச்சர். கோல் - பிரப்பங்கால். நூற்றுவில் -
நீட்டலளவை.
|