உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
              அம்பணை மூங்கிற் பைம்போழ் நிணவையும்
           வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும்
     30    கட்டளை யானையு மத்தக வுவாவும்
           வையப் புறத்தொடு கைபுனைந் தியற்றிப்
           பூத்தூர் நிலையோ டியாப்புற வமைத்துக்
           காமர் பலகை கதழவைத் தியற்றி
           வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம்
     35    எழுதுவினைக் கம்மமொடு முழுதுமுத லளைஇ
           மென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி
           அரிச்சா லேகமு நாசியு முகடும்
           விருப்புநிலைத் தானமும் பிறவு மெல்லாம்
           நேர்ந்துவனப் பெய்திய நீரணி மாடம்
     40    சேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த
 
                 (இதுவுமது)
            28 - 40: அம்..........வீதியுள
 
(பொழிப்புரை) அழகிய பருத்தபசிய மூங்கிற்பிளப்பாலே பின்னப்பட்ட பாய்களாலே வட்டமும் சதுரமும் முக்கோணவடிவமும் சிறந்த தலைமையுடைய யானையுருவமும் மத்தகமு முடைய பிறயானை வடிவங்களும் வையம் என்னும் உறுப்பின் புறத்திலே இயற்றி வண்ண முதலியவற்றால் ஒப்பனை செய்து பூவாலே தூர்க்கப்பட்ட நிலைமையோடு அழகுற அமைத்து, அழகிய பலகைகளைச் சிறப்புற அமைத்து வண்ணம் தீற்றிய நுண்ணிய நூலானியன்ற அழகிய கிழியின்கண் ஓவியமெழுதிய தொழிற்சிறப்போடு உருவமுழுவதும் சேர்த்திப் பின்னரும் மெல்லிய நெட்டிப்பிளப்பாலாகிய சந்துகளையுடையவாய் மான்கட்காலதரும் நாசிகையும் முகடும் விருப்பந் தரும் நிலைத்தானமும் என்னும் உறுப்பும் பிறவும் எல்லாம் உடையவாய் அழகெய்திய நீரணிமாடங்கள் சேர்ந்துள்ள வீதியின்கண்ணே என்க.
 
(விளக்கம்) நிணவை - பின்னப்பட்ட (பொருள்) பாய். மூங்கிற் பாயாலே பல்வேறு வடிவம் அமைத்து மலர்களாலே யாண்டும் நிரப்பிப் பலகை தைத்து ஓவியமெழுதிய படங்களை அமைத்துச் சாலேகம் முதலிய உறுப்புக்களை உடையவாய் அழகெய்திய நீரணிமாடம் என்க. வையம் - மாடத்தின் ஓருறுப்பு. முழுதும் - உருவமெங்கும்.