| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 42. நங்கை நீராடியது | 
|  | 
| பண்டை மகளிர் 
      படிமையிற் பிழையாது தண்டந் தூக்கித் தலைப்புனல் விழவினைக்
 50    கொண்டுவந் தாடுங் கொழுமலர்த் 
      தடங்கட்
 பொங்குமலர்க் கோதாய் போற்றென் 
      போரும்
 நின்னை 
      யுவக்குநின் பெருமா 
      னேந்திய
 வென்வேல் கடுக்கும் வெம்மை 
      நோக்கத்துப்
 பொன்னே போற்றி பொலிகென் போரும்
 55    பொருவேட் பேணிப் பொலியுஞ் 
      சேனையுள்
 பெருவேண் மறைந்து பெரும்புன 
      லாடும்
 திருவே 
      மெல்லச் செல்கென் போரும்
 | 
|  | 
| (இதுவுமது) 48 - 57: 
      பண்டை..........செல்கென்போரும்
 | 
|  | 
| (பொழிப்புரை)  நந்த 
      முன்னையோராகிய மகளிருடைய   ஒழுக்கத்தைச் சிறிதும் பிழைத்தலின்றி 
      உய்திபெறுதலைக்   கருதித் தலையாய இந்நீர் விழாவினை மேற்கொண்டு வந்து 
        நீராடாநின்ற கொழுவிய மலர்போன்ற பெரிய கண்களையும்   
      விரியாநின்ற மலர் மாலையினையும் உடையோய் ! பாதுகாத்தருள்க   என்போரும், 
      நின்னைப் பெரிதும் விரும்பா நின்ற நின் கணவன்   கையிலேந்திய 
      வெற்றியையுடைய வேற்படையைப் போன்ற   வெப்பம் தரும் பார்வையையுடைய 
      திருமகள் போல்வோய்!   பொலிவுற்றுத் திகழ்க! என்போரும்; அசுரரைப் 
      பொருதழிக்கும்   முருகவேளை வழிபடுதலானே பொலிவுற்றுத் திகழாநின்ற நமது 
        உஞ்சை நகரத்தே எழுந்தருளியிருக்கும் பெரிய அம்முருகவேள்   
      தானும் இத்திருநீர்ப்பொய்கையிலே உருக்கரந்து வந்துநீராடுவன் காண்!   
      எங்கள் செல்வமே! மெல்லச் செல்க! என்போரும். | 
|  | 
| (விளக்கம்)  படிமை - 
      ஒழுக்கம். தண்டம் - பழவினைக்கு உய்தியாக.    
      போற்று - பாதுகாத்தருள்க! நின் பெருமான் - என்றது உதயணனை -   
      வெளிப்படையில் நின் தந்தை என்றாற்போலவும் நின்றது. பொன் -   
      திருமகள். பெருவேள் - முருகப்பெருமான். தெய்வமும் வந்து நீராடலின்   
      அச்சத்தோடும் அன்போடும் மெல்லச் செல்க என்று அறிவுறுத்தபடியாம்.   
      மறைந்து - மக்கட்குத் தோன்றாதபடி எனினுமாம் ! |