உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
            பைங்கேழ்ச் சாந்துங் குங்குமக் குவையும்
           மலர்ப்பூம் பந்துந் தலைத்தளிர்ப் போதும்      
           மல்லிகைச் சூட்டு நெல்வளர் கதிரும்
           இனிக்குறை யில்லை யாமு மாடுகம்
     70    எனத்துணிந் திளையோ ரிருநூற் பெய்த
           அனிச்சக் கோதையு மாய்பொற் சுண்ணமும்
           அந்தர மருங்கின் வண்டுகை விடாஅச்
           சுந்தரப் பொடியுஞ் சுட்டிச் சுண்ணமும்
           வித்தகர் கொடுத்த பித்திகைப் பிணையலும்
     75    மத்தநல் யானை மதமு நானமும்
           வாசப் பொடியொடு காயத்துக் கழும
           அந்தரத் தியங்குநர் மந்திர மறப்ப
           நறுந்தண் ணாற்ற முடையவை நாடி
           எறிந்துந் தூவியு மெற்றியுந் தெளித்தும்
     80    பல்லோர் பல்சிறப் பயர்வன ரேத்தி
 
                 (இதுவுமது)
            66 - 80: பைங்கேழ்..........ஏத்தி
 
(பொழிப்புரை) பின்னர் அம்மங்கையர் எல்லாம் இனி யாம் ஆடுதற்குக் குறையேதும் இல்லையாகலின் யாமும் ஆடுவேம் என்று துணிந்து, பசிய நிறமமைந்த சந்தனமும் குங்குமக்குவியலும் மலரானியன்ற பூப்பந்துகளும் முதலிற் றோன்றிய தளிரோடு கூடிய மலர்களும் மல்லிகைமாலையும் நெல்லினது வளர்ந்த கதிரும் இரண்டு நூல்களாலே இணைத்த அனிச்சமலர்மாலையும் நுணுகிய பொற் சுண்ணமும் அள்ளித் தூவியவிடத்தே இடைவெளியிலேயே வண்டுகள் நிலத்திற்படாதபடி உண்ணுதற்குரிய நறுமணமுடைய சிந்துரப் பொடியும் உடம்பைத் தூய்மை செய்தற்குரிய நறுமணப் பொடியும் திறமுடையோராற் றொடுக்கப்பட்ட பிச்சிமலர் மாலையும் செருக்குடைய யானை மதமும் புழுகும் ஏனை நறுமணப் பொடிகளோடு வானத்தே பரவி மணங்கமழ்ந்து நிரம்பாநிற்ப, வானத்தே இயங்குந் தன்மையுடைய கந்தருவர் முதலியோர் இந்நறுமணத்தின்கண் மனம் போக்கித் தாம் இயங்குதற்குரிய மறை மொழியை மறந்து போதற்குக் காரணமான நறிய தண்ணிய மணமுடைய பொருள்களை ஆராய்ந்து கொண்டு வாசவதத்தைமேல் எறிந்தும், தூவியும், இங்ஙனம் பலவேறு வகைச் சிறப்புக்களைச் செய்து வாழ்த்தாநிற்ப என்க.
 
(விளக்கம்) குவை - குவியல். குங்குமமிட்டு வைக்கும் பரணி என்னுங் கலன் என்பாருமுளர். சூட்டு - மாலை. ஆய் - நுணுகிய வண்டு பற்றிக் கொண்டு நிலத்தில் வீழவிடாப் பொடி என்க. சிறந்த சுண்ணத்தைத் தூவிவிடின் வண்டுகள் அவற்றை இடைவெளியிலேயே கவர்ந்துண்ணும் என்பதனை,
'வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை
விண்ணிற் றூவியிட் டான்வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ண வண்டொடு தேன்கவர்ந் துண்டவே' (894)
எனவரும் சிந்தாமணியினுங் காண்க

    பித்திகை - பிச்சி. கழும - நிரம்ப காயம் - தலைக்குறை. ஏத்தி - ஏத்தவென்க.