உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
            வெல்போர் வேந்தன் மடமகள் விரும்பி
           நில்லாத் தண்புன னெடுங்கோட் டொருசார்த்
           துறையமைத் தியற்றிய குறைவில் கூடத்
           தம்புகை மருங்கிற் செஞ்சுடர் மழுங்கச்
     85    சீயமு மேறும் பாய்பரிப் புரவியும்
           யானையும் புலியு மன்னமு மகன்றிலும்
           ஏனைய பிறவு மேஎ ருடையன
           புனைவுகொண் டேற்றி வினைவல ரியற்றிய
           கனல்சேர் புமையக லேந்திய கையின்
     90    மூதறி பெண்டிர் காதலொடு பரவி
 
        (வாசவதத்தையை மணையிற் சேர்த்தல்)
            81 - 90: வெல்போர்..........பரவி
 
(பொழிப்புரை) வெல்லும் போரையுடைய பிரச்சோதன மன்னன் மகளாகிய வாசவதத்தையின் பொருட்டு நிலை நில்லாமே இயங்கா நின்ற குளிர்ந்த நீரையுடைய பொய்கையினது நெடிய கரையின் கண்ணே ஓரிடத்தே துறையமைத்து இயற்றப்பட்ட குறைவற்றதொரு கூடத்தின்கண்ணே, சிங்கமும், காளையும், பாய்ந்திழுக்கின்ற குதிரையும், புலியும், அன்னப் பறவையும், மகன்றிலும் ஏனைய பிறவும் ஆகிய விலங்கு பறவைகளின் அழகுடையனவாகிய வடிவங்களை ஒப்பனை செய்து பதித்துத் தொழில் வல்லோராற் செய்யப்பட்டனவும், நெருப்பு மூட்டப்பட்டனவுமாகிய புகை யகல்களைக் கையிலேந்திய ஆண்டான் மூத்து அறிவான் மிக்க பெண்டிர்கள், அவற்றில் எழுகின்ற அழகிய நறுமணப் புகையினாலே சிவந்த ஞாயிற்று மண்டிலமும் ஒளிமழுங்கும்படி செய்து அன்போடு இறைவனை வாழ்த்தி வணங்கி என்க.
 
(விளக்கம்) வேந்தன் - பிரச்சோதனன். மடமகள் பொருட்டு இயற்றிய கூடம் என்க. கூடம், நாற்புறமும் திரைவளைத்துக் கட்டிய ஓரிடம். சீயம் - சிங்கம். ஏறு - ஆனேறு. மகன்றில் - ஒருவகை நீர்ப்பறவை. ஏஎர் - அழகு. புகையகல் - தூபமூட்டி. தூபக்கால். இது, தூபவகல் என்பதின் திரிபு. இறைவனைப் பரவி என்க.