உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             நீர்கால் கழீஇய வார்மண லெக்கர்
            முத்து மணியும் பொற்குறு சுண்ணமும்
            வெள்ளியும் பவழமு முள்விழுந் திமைப்ப
            வண்ண வரிசியொடு மலரிடை விரைஇ
     95     நுண்ணிது வரித்த வண்ண னகர்வயின்
            தமனியத் தடத்துப் பவழப் பாய்கால்
            திகழ்மணி வெள்ளிப் புகழ்மணை சேர்த்திக்
 
                   (இதுவுமது)
               91 - 97: நீர்..........சேர்த்தி
 
(பொழிப்புரை) பண்டு பெய்த மழைநீரானே தூய்மை செய்யப்பட்ட நெடிய மணலாகிய எக்கரின் மேல் முத்தும் ஏனைய மணிகளும் பொன்னை யிடித்துச் செய்த சுண்ணமும் வெள்ளியும் பவழமும் அழுந்திக்கிடந்து சுடராநிற்கும்படியும் பல்வேறு நிறமமைந்த அரிசியோடு மலர்களையும் விரவி நுணுக்கமாகக் கோலஞ் செய்த நிறமிக்கதொரு படவீட்டின்கண் பொன்னாலியன்ற விளிம்பினையும் பவழத்தாலியன்ற பாய்கின்ற நிலையிற் செய்யப்பட்ட கால்களையும் மணிகள் பதித்துத் திகழாநின்ற வெள்ளியாலாய புகழ் மிக்கதொரு மணையைக் கிடத்தி என்க.
 
(விளக்கம்) கால்கழீஇய - ஒருசொல்; கழுவிய. மழைநீர் கழுவிய எக்கர் என்றவாறு. 'புனல்கால் கழீஇய மணல்வார் புறவின்' என்றார் மலைபடுகடாத்தினும் (48). முத்து முதலியவற்றைச் சிதறிப்பின்னர் அரிசியும் மலரும் விரவிக் கோலஞ்செய்த நகர் என்க. நகர் - வீடு. தடம் - விளிம்பு. பாய் கால் : வினைத்தொகை. வெள்ளி மணை, புகழ்மணை என்று தனித்தனி கூட்டுக. மணை - ஒருவகை இருக்கை.