| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 42. நங்கை நீராடியது | 
|  | 
| புடைவீங் கிளமுலைப் பூண்பொறை 
      யாற்றா திடையே மாக்குமென் றடைவனர் 
      விலக்கிச்
 சீலத் தன்ன தெய்வங் 
      கவினிக்
 கோலங் கொண்ட கூந்தலொடு குளித்துப்
 130     பிடிக்கையின் வணரு முடிக்குர 
      லாற்றாள்
 செருக்கய லன்ன சேயரி 
      நெடுங்கண்
 அரத்தகம் பூப்ப வலமந் 
      தெழலும்
 வாழிய ரெம்மனை வருந்தினை 
      பெரிதென
 மொழியறி மகளிர் தொழுதனர் வணங்கி
 135    அத்துமுறை யுரிஞ்சி யாயிரத் 
      தெண்குடம்
 முத்துறழ் நறுநீர் முறைமையி னாட்டி
 | 
|  | 
| இதுவுமது 126 - 136: புடை..........ஆட்டி
 | 
|  | 
| (பொழிப்புரை)  'நங்காய்! 
      இனி ஆடற்க! நீர் நெடிதாடின் நினது   பக்கம் பருத்த இளைய முலைகளையும் 
      அணிகலன்களையும்   பண்டே சுமக்கலாற்றாத நுண்ணிடை வருந்துங்காண்!' என்று 
        கூறி விலக்குதலாலே மேலோர் ஒழுக்கம் அங்ஙனமிருத்தலின்   தன் 
      கூந்தலில் உறையும் சௌபாக்கியவதி என்னும் தெய்வத்தானும்   பேரழகு பெற்று 
      மேலும் ஒப்பனை யழகுங்கொண்ட கூந்தலை   நனையாமல் அக் கூந்தல் வரையில் 
      குளித்துப் பிடியானையின்   கைபோன்று வளையும் தனது கூந்தற் கொத்தினைச் 
      சுமக்கவாற்றாளாய்   ஒன்றோடொன்று போர்புரியும் இரண்டு 
      கயல்மீன்களையொத்த   சிவந்த அரிபரந்த நெடியதன் கண்கள் மேலும் சிவவா 
      நிற்ப   வருந்தி எழுந்தவுடன் இனியமொழி பேச அறிந்து தோழியர்   
      'எம் அன்னையே! இந்நீராடலாலே நீ பெரிதும் வருந்தினைகாண்!'   என்று 
      பரிந்து தொழுது வணங்கிப் பத்துவகையான துவர்களையும்   தேய்த்து 
      ஆயிரத்தெட்டுக் குடத்திற் கொணர்ந்த முத்துப் போன்ற நறிய   நீரினையும் 
      முறைப்படி ஆட்டி என்க. | 
|  | 
| (விளக்கம்)  சீலத்து - 
      சீலம் உண்மையால் - சீலம் ஈண்டுக்   கற்பின் மேற்று. சீலமுடைய குலமகளிர் 
      கூந்தலின்கண் ''  சௌபாக்கியவதி'' என்னும் ஒரு தெய்வம் உறையும் என்றும் 
        அதனால் அவர் இன்றியமையாத பொழுதி னன்றி வாளா   தலைமுழுகுதல் 
      கூடாது என்பர். அன்ன தெய்வம் என்றது -   சீலமுடையார் கூந்தலிலுறையும் 
      அத்தெய்வம் என்றவாறு,    கூந்தலொடு குளித்தென்றது கூந்தல் நனைய 
      முழுகாமற் குளித்து   என்றவாறு. முடிக்குரல் - கூந்தற்கொத்து - ஆற்றாள் - 
      சுமக்க  லாற்றாள். அரத்தகம் - செம்மைநிறம.் அத்து - துவர். அது பத்து 
        வகைப்படும். அவற்றை 'பூவந்தி திரிபலை புணர்கருங்காலி,   
      நாவலொடு நாற்பான் மரமே' எனவரும் (சிலப் - 6 : 76 - 9 உரை)   
      மேற்கோளாற் காண்க. |