உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
            காரிருங் கூந்த னீரற வாரி
           வனப்பொடு புணர வகுத்தணி முடிமிசை
           நீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை சிகழிகை
           முல்லையங் கோதை சில்சூட் டணிந்து
     150    தண்ணறுஞ் சாந்த நுண்ணிதி னெழுதிப்
           பதினோ ராண்டினுட் பாற்படக் கிளந்த
           விதிமா ணுறுப்பிற்கு வேண்டுவ வேண்டுவ
           கதிர்மாண் பல்கலங் கைபுனைந் தியற்றி
           உறுப்பெடுக் கல்லா வுடம்பின ளாயினும்
 
              (இதுவுமது)
        146 - 154: காரிரு.........ஆயினும்
 
(பொழிப்புரை) முகில் போலும் கரிய கூந்தலின்கண் நீர் இல்லையாம்படி நன்கு சீப்பால் வாரி அழகோடு பொருந்துபடி வகுத்து அழகுடைய அக்கூந்தலின்கண் நீர்ப்பூக்களாலியன்ற மாலைகளையும் சிறப்பமைந்த சிகழிகையினையும் முல்லைமலர் மாலையாகிய சிலவாகிய சூட்டுகளையும் அணிந்து நெற்றியினும் தோளினும் தண்ணிய சந்தனத்தாலே நுண்ணிதின் கோலமெழுதிப் பதினோராட்டை அகவையினுட்பட்டு எழுச்சியுடையவாகிய இலக்கணமாட்சிமையுடைய அவ்வாசவதத்தையின் உறுப்புகட்கு வேண்டுவன எவை எவை என்று ஆராய்ந்துகொண்ட ஒளி மாட்சிமையுடைய பலவாகிய அணிகலன்களையும் கைசெய்து அணிந்து மேலும் அவள்தான் தன் முலை முதலிய உறுப்புகளையே சுமக்கவாற்றா மெல்லுடல் உடையளாதலைக் கண்டு வைத்தும் அவ்வண்ணமகளிர் என்க
 
(விளக்கம்) வனப்பு - இயற்கையழகு, சீர்ப்பு - சிறப்பு. பதினோராட்டைப் பருவம் திருமணப் பருவம். ஆதலால் மகளிர் உறுப்பெல்லாம் திரண்டு அழகெய்தும் என்பது கருத்து. விதி - இலக்கணம்.