உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             திருந்திய திண்கோட் பெருந்திணை மகளிரும்
           செண்ண மமைத்த செம்பொற் பட்டத்து
     175    வண்ண மணியொடு முத்திடை விரைஇய
           கண்ணி நெற்றிக் காவிதி மகளிரும்
           காலினுங் கலத்தினுஞ் சாலத் தந்த
           மாநிதிச் செல்வத்து வாணிக மகளிரும்
           நிலத்தோ ரன்ன நலத்தகு பெரும்பொறை
     180    அருங்கடி மூதூர்ப் பெருங்குடி மகளிரொ
           டெண்ண லாகத்துப் பெண்ணுல கேய்ப்பக்
           கன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு
           நன்மணி யைம்பா னங்கையொடு போந்தோர்
 
                 (இதுவுமது)
         172 - 183: அருந்திணை............போந்தோர்
 
(பொழிப்புரை) அரிய ஒழுக்கமுடைய தோழிமாரும் அவ்வொழுக்கத்தின்கண்ணே வழுவுதலில்லாத திருத்தமுடைய திண்ணிய கொள்கையாகிய கற்புடைமையிற் சிறந்த பெருங்குடி மகளிரும் ஒப்பனை செய்யப்பட்ட செம்பொன்னாலியன்ற பட்டத்தோடு வண்ணமுடைய மணியும் முத்துங்கலந்த கண்ணியணிந்த காவிதிப் பட்டம் பெற்றோருடைய மகளிரும், வண்டியானும் மரக்கலத்தானும் மிகுதியாக ஈட்டிக் கொணர்ந்த பெரும் பொருளை யுடைய வாணிகருடைய மகளிரும் நிலம் போன்ற நலமிக்க பெரிய பொறையினை மேற்கொண்ட அரிய காவலையுடைய உஞ்சை நகரத்தே வாழ்கின்ற ஏனைப் பெருங்குடியிற்றோன்றிய மகளிரும் எண்ணி மகிழ்தற்குரிய நல்ல உடம்பினையுடைய மகளிர் மட்டுமே வாழாநின்ற மணித் தீவத்தை இப்பொய்கைக்கரை நிகர்க்கும்படி கன்னிமகளிராகிய இவரெல்லாம் ஒளிபரப்பும் ஒப்பனையோடு நல்ல நீலமணி போன்ற நிறமுடைய கூந்தலையுடைய வாசவதத்தையுடன் வந்தவர் என்க.
 
(விளக்கம்) வந்தவர் : பெயர். போர்தலைக் கொண்டு (185) என மேலே தொடரும். அருந்திணை - அரிய ஒழுக்கம். அவ்வயின் - அவ்வொழுக்கத்தின்கண். திண்கோள் என்றது கற்புடைமையை. வள்ளுவனாரும் ''கற்பென்னுந் திண்மை'' (குறள் - 54) என்பதுணர்க. பெருந்திணை - பெருங்குடி (குலம்). பட்டம் காவிதிப்பட்டத்தின் அறிகுறி. கண்ணி - நெற்றியிற்சூடு மாலை. காவிதி - காவிதிப்பட்டம் பெற்றோர். கால்: ஆகுபெயர் - வண்டி. ஓரன்ன ஒரு தன்மையான. ''அகழ்வாரைத் தாங்கும் நிலத்தின் பொறை போன்ற பெரும் பொறை என்றவாறு. மூதூர் - உஞ்சைநகர். எண் நல் ஆகம் என்க. ஆகம் - உடம்பு. எண்ணல்லாகம்: வினைத்தொகை. பெண்ணுலகு என்றது மணித்தீவத்தை. 'விண்ணுறை தேவரும் விழையும் போகத்துப் பெண்ணுறை உலகம்' என்றும் (3 - 14 : 4 - 5) 'பெண்ணுறை பூமி' என்றும் (3 - 24: 58) பிறாண்டும் ஓதுவர்.