உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             பொறிமயிற் றொழுதி புயல்கழி காலைச்
     200    செறிமயி ருளர்த்துஞ் செய்கை போற்றம்
            நெறிமயிர்க் கூந்த னீரற வாரிச்
            செழும்பூம் பிணைய லடக்குபு முடித்துக்
            குழங்கற் சாந்த மழுந்துபட வணிந்து
 
                 (இதுவுமது)
            199 - 203: பொறி..........அணிந்து
 
(பொழிப்புரை) மழைபெய்து முகில்கள் கழிந்துபோன காலத்தே புள்ளிமயிற் கூட்டம் தமது செறிந்த தோகையை விரித்துக் கோதி உலர்த்துமாறு போல அம்மகளிர் தமது நெறிப்புடைய மயிராகிய கூந்தலின்கண் நீர் அற்றுப் போம்படி வாரிச் செழித்த மலர்மாலையை அக்கூந்தலின் அகத்தே பொதிந்து முடித்துச் சந்தனக் குழம்பை நன்கு மெய்யில் ஆழும்படி பூசி என்க.
 
(விளக்கம்) பொறி - புள்ளி. தொழுதி - கூட்டம். புயல் - முகில் நெறி - நெறிப்பு. மயிர்க்கூந்தல் - இருபெயரொட்டு. அடக்குபு - அடக்கி. அழுந்துபட - ஆழ.