உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             பைங்கூற் பாதிரிப் போதுபிரித் தன்ன
     205    அங்கோ சிகமும் வங்கச் சாதரும்
            கொங்கார் கோங்கின் கொய்மல ரன்ன
            பைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும்
            நீலமு மரத்தமும் வாலிழை வட்டமும்
            கோலமொடு புணர்ந்த வேறுவே றியற்கை
     210     நூலினு முலண்டினு நாரினு மியன்றன
            யாவை யாவை யவையவை மற்றவை
            மேவன மேவன காமுற வணிந்து
            கம்மியர் புனைந்த காமர் பல்கலம்
            செம்மையி னணியுஞ் செவ்விக் காலத்துச்
 
                  (இதுவுமது)
           204 - 214: பைங்கூன்..........காலத்து
 
(பொழிப்புரை) பசிய வளைந்த பாதிரிப்பூவைப் பிரித்துப் பார்த்தாற்போன்ற நிறமுடைய அழகிய பட்டாடையும், வங்க நாட்டுச் சாதர் என்னும் ஆடையும், தேன்நிரம்பிய கோங்கின்கட் கொய்த மலர்போன்ற பசிய நிறமுடைய கலிங்கநாட்டு ஆடையும், ஏனைய பட்டாடைகளும் பருத்தி நூலாடையும் நீலநிறமுடையனவும், செந்நிறமுடையனவும் வெண்ணூலாடையும் பூத்தொழிலாற் கோலமுடைய வேறு வேறு வகையான இயல்பினையுடைய பருத்தி நூலானும் பட்டு நூலானும் நாரானும் இயற்றப்பட்டன எவ்வெச் சிறந்த ஆடைகள் உளவோ அவ்வவற்றினும் வைத்து ஒவ்வொருவரும் தாம் தாம் விரும்புவனவற்றைக் கண்டோர் விரும்பிக் காணும்படி அணிந்து கொண்டு, மேலும் கம்மியர் இயற்றிய அழகிய பலவாகிய அணிகலன்களையும் செவ்வையாக அணியாநின்ற செவ்வியையுடைய அந்தக் காலத்தே என்க.
 
(விளக்கம்) கூன் - வளைவு. போது - மலர். கோசிகம் - பட்டாடை. வங்கநாட்டில் நெய்யும் சாதர் என்னும் ஆடை என்க. கேழ் - நிறம். தூசு - பருத்தியாடை. நீலம், அரத்தம் என்பன ஆகுபெயர். வட்டம் - ஆடை, உலண்டு - ஆகுபெயர்: பட்டுநூல். செவ்விக்காலம் - செவ்வியை யுடைய காலம் என்க.