உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             சிறையெனக் கொண்ட மன்னவன் செல்வமும்
            துறைவயி னாடுநர் துதைந்த போகமும்
     235    நெய்பெய் யழலிற் கையிகந்து பெருகிப்
            புறப்படல் செல்லா வாகி மற்றவை
            மனத்திடை நின்று கனற்றுபு சுடுதலின்
            மாற்றுச் செய்கை யென்னு நீரால்
            ஆற்ற வெவ்வழ லவிப்பக் கூடுதல்
     240    வயிரத் தோட்டி யன்றியும் பயிரிற்
            சொல்லியது பிழையாக் கல்விக் கரணத்துப்
            பிடியொடு புணர்ந்த விப்பக லாயினும்
            முடியு மென்னு முயற்சிய னாகிப்
 
                   (உதயணன் கருதுதல்)
              233 - 243: சிறை..........முயற்சியனாகி
 
(பொழிப்புரை) தன்னைச் சிறையாகப்பற்றிய பகைவனாகிய பிரச்சோதன மன்னன் செல்வப்பெருக்கம் அவன் திருவிழாவின்கண் பொய்கைத் துறையிலே நீராடாநின்ற அவன் குடிமக்களது செறிந்த இன்பப்பேறும் தனது நெஞ்சத்தே அடங்கிய பகைத் தீக்கு நெய்யாகி வளர்த்தலாலே அச்சினம் அளவுகடந்து பெருகா நிற்பவும், அக் காட்சிகள் தானும் தன் மனத்தினின்று அகலாவாய் ஆண்டே நின்று மிகவும் சுடுதலானே, அப்பிரச்சோதன மன்னன் தன் திறத்தே செய்த வஞ்சகச்செயலுக்கு ஏற்புடையதொரு மாற்றுச்செயலாகிய நீராலேதான் இந்த வெவ்விய நெருப்பினை ஆற்றவும் அவிப்பவும் கூடும். அத்தகையதொரு மாற்றுச் செயல் வயிரத்தாலியற்றிய தோட்டியின்றியே யாம் குறிப்புச்சொற் கூறிய துணையானே கூறியசெயலைப் பிழையின்றிச் செய்துமுடிக்கும் கல்வித் தகுதியுடைய இப்பத்திரா பதியாகிய கருவியைப் பெற்றிருக்கின்ற இந்த அரிய பகற்பொழுதிலேனும் செய்துமுடிக்கக்கூடும் என்னும் கருத்துடையனாய் அக்கருத்திற்கேற்ப முயலாநின்ற முயற்சியையும் மேற்கொண்டவனாகி என்க.
 
(விளக்கம்) திருமதுகையாகத் திறனிலாப்பகைவர் செய்யும் பெருமிதம் கண்டவழி மானமுடையார் மனம் எரிமண்டி எரியும் ஆதலால் ஈண்டுப் பிரச்சோதனன் பெருமிதம் உதயணன் உள்ளத்தைச் சுட்டெரிக்கின்றது என்க. துதைந்த - செறிந்த, அழலிற் பெய்த நெய் போன்றென்க. பெருகி - பெருக, மாற்றுச் செய்கை - ஒருவர்செய்த செயலுக்கு ஈடாகச் செய்யும் எதிர்ச்செயல். பயிரின் - குறிப்பிற்கூரிய துணையானே என்க. முடியும் - முடிக்கக்கூடும்.