உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
         
     5    பாகிய லுள்ளத்துப் படிமந் தாங்கிய
          யூகி சூழ்ந்த வுரைப்பருஞ் சூழ்ச்சி
          வாய்திறந் தின்றிது கோமகற் குரையெனக்
          கூறின னருளிக் குறிப்பிற் கேண்மதி
          செறுநர் சிறையகப் பட்டன னாயினும்
     10    உறுவலி நாகத் தொற்றிடம் பார்த்தல்
          அறைகடன் ஞாலத் திறைகட னாதலின்
 
        (யூகி கூறிய செய்தியை வயந்தகன் உதயணனுக்குணர்த்தல்)

                   5 - 11: பாகியல்..........ஆதலின்

 
(பொழிப்புரை) 'வேந்தே! கேட்டருள்க! செயலிற்குப்பக்குவ மெய்திய நெஞ்சத்தோடே தவவேடம் புனைந்து கொண்டிருக்கின்ற யூகியந்தணன் தான் செய்துள்ள கூறுதற்கரிய சூழ்ச்சியினை என்பாற் கூறி, 'இதனை இன்று நங்கோமகனுக்கு நன்கு வெளிப்படுத்துக் கூறி விடு என்று என்பாற் கூறினன்.அவன் கூறியஅவ்வரு மறைச்செய்தியை நான் இப்பொழுது நினக்குக் கூறுவேன் செவி சாய்த்தருளிக் குறிக்கொண்டு கேட்டருள்க!' (இனி வருவன யூகி கூறியது) நம்பெருமான் பகைவரால் சிறைக்கோட்டத்தே வைக்கப்பட்டனனாயினும், ஆரவாரிக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தை ஆளும் மன்னர் கடன் இத்தகைய செவ்வியிலே மிக்க வலி யுடைய யானையானது தனக்குத் தீங்கிழைத் தார்க்குத் தானும் தீங்கிழைத் தற்குச் செவ்வி தேர்ந்திருத் தல்போன்று, தம் பகைவர்க்கு மாற்றுச்செயல் செய்தற்கேற்ற செவ்வி தேர்ந்திருத்தலே கடமையாகும் ஆதலினாலும் என்க.
 
(விளக்கம்) படிமம் - தவவேடம். கோமகன் : உதயணன். செறுநர் - பகைவர். உறுவலி - மிக்கவிமை. நாகம் - யானை. 'வேற்றுவ னெறிந்த கல்லைக், காந்திய கந்ததாகக் கவுட்கொண்ட களிறுபோல' எனவும் (சூளா - சீயவதை - 94) 'களிறுகவுளடுத்த வெறிகற் போல, ஒளித்த துப்பினை' எனவும் (புறநா 30)' காய்ந் தெறி கடுங்கற்றன்னைக் கவுட் கொண்டகளிறுபோல, வாய்ந்தறி வுடையராகி' எனவும் (சீவக-2910) பிற சான்றோரும் ஓதுதல் காண்க.