உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
நம்மை யெள்ளிய வெம்மை
வேந்தன் சூழ்ச்சி
வெள்ளத் தாழ்ச்சி
யெய்தி ஒன்னா
தோருந் துன்னின ராடும்
15 நெடுநீர் விழவிற் படைபிடித்
தோரைக் கடிமுறை
கடிவ தல்ல தில்லென
இடுமணி யானை யெருத்த
மேற்றி அடன்முர
சறைந்தமை யறிந்தன மாதலின்
|
|
(இதுவுமது)
12 -
18:
நம்மை..........ஆதலின்
|
|
(பொழிப்புரை) நம்மை இகழ்ந்த நம்பால்
பகைமையுடைய பிரச்சோதனமன்னன் நாம் முன்பு செய்த சூழ்ச்சியாகிய
வெள்ளத் திலே முழுகித் தனது பகைவரும் வந்து நீராடாநின்ற நெடிய இந்நீர்
விழாவின்கண்ணே தம்படைஞருள் ஒருவரும் படைக்கலம் பிடித்தல்
கூடாதென்றும், படைக்கலன் பிடித்தார் யாவரேனும் அவரை ஒறுக்கும் முறைப்படி
ஒறுப்பதன்றி வாளா விடேம் என்றும், கட்டிய மணியை யுடைய யானை எருத்தத்தே
வெற்றி முரசினை ஏற்றி அறைவித்த மையும் யாம் அறிந்துளேமாகலினானும்
என்க.
|
|
(விளக்கம்) பிரச்சோதனமன்னன் நீர்விழா நிகழ்த்துவதற்குக் காரணம் தான் செய்த
சூழ்ச்சியே ஆதலால், அவன் நமது சூழ்ச்சியில் நன்கு வீழ்ந்துவிட்டான்
என்பான், வெம்மை வேந்தன் சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சியெய்தி
முரசறைந்தமை என்றான். மன்னன் பொச்சாப்பினால் இப்பொழுது
மதியிழந்திருக்கின்றான் என்பான் ஒன்னாதோரும் துன்னி யாடும் விழவில்
படைபிடித்த தன் மறவரை ஒறுப்பேன் என்று முரசறை வித்தான் என்றான்.
இங்ஙனம் முரசறைந்தமை நமது செயலுக்குப் பெரிதும் உதவியாகும் என்பான்
அறைந்தமையறிந்தனம் என்றான். கடிமுறை - ஒறுக்கும்முறை. அல்லதில்லெனும்
எதிர்மறை இரண்டும் கடியப்படுவர் என்னும் உடன்பாட்டுப் பொருளை
வற்புறுத்துகின்றன. அடன்முரசு என்றது இகழ்ச்சி.
|