உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           ஊர்வயிற் கம்பலை யல்ல தொருவரும்
          நீர்வயிற் கம்பலை நினைக்குந ரில்லை
          இல்லையாதலின் வெல்சமம் பெருக்கி
    30    வேந்தற் கோடல் வியனாடு கெடுத்தல்
          ஆங்கவன் மகளை யருஞ்சிறை வௌவுதல்
          மூன்றினு ளொன்றே காய்ந்தவர் கடுந்தொழில்
 
                 (இதுவுமது)
         27 - 32: ஊர்வயின்.........கடுந்தொழில்
 
(பொழிப்புரை) அச்சூழ்ச்சியின்படி நம்மங்கையர் அகநகரில் தீக் கொளுவிய பொழுது ஈண்டுக் குழுமியிருப்போர் அனைவரும் ஆங்கு நகரத்தே எழாநிற்கும் ஆரவாரத்தை எண்ணிக் கலங்குவாரன்றி இங்கே உண்டாகும் ஆரவாரத்தை நினைத்துப் பார்ப்பவர் ஒருவரேனும் இலராவர் என்பது தேற்றம். ஈண்டு நிகழ்வனவற்றை நோக்குவாரிலர், ஆகவே அந்த அரிய செவ்வியிலே இம்மன்னன் படையை வெல்லுமொரு போரினை யுண்டாக்கி இப்பிரச்சோதனமன்னனைச் சிறைப்பிடித்தல்; அல்லது இவனுடைய அகன்ற நாட்டினைக் கெடுத்தல்; அல்லது இவன் மகளாகிய வாசவதத்தையை அரிய சிறையாகப் பற்றிக்கோடல் என்னும் இந்த மூன்று செயலுள் வைத்து ஒரு செயலே இவன்பாற் பகைமையுடை யோர் இவன் செய்த தீமைக்கு எதிர்ச்செயலாகச் செய்தற்கியன்ற கொடிய செயலாகும் என்க.
 
(விளக்கம்) ஊர்வயிற்கம்பலை - ஊரிற் றீப்பற்றியெரியுங்கால் உண்டாகும் ஆரவாரம். நீர்வயிற் கம்பலை என்றது ஈண்டு நம்மறவர் இயற்றும் போர் முதலியவற்றாலுண்டாகும் ஆரவாரம் என்றவாறு.வேந்தன் : பிரச்சோதனன். மகள்: வாசவதத்தை. காய்ந்தவர் என்றது நாம் என்றவாறு.